கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நண்பனை கொலை செய்த வழக்கில் ஐந்துபேருக்கு வாழ்நாள் சிறை (ஆயுள்) தண்டனை வழங்கியது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சோழிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் இவர் நண்பர் முருகனின் மனைவி, தேவி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் தெரிந்து ஆத்திரமடைந்த முருகன், தனது உறவினர்களுடன் சேர்ந்து, 2012- ல் யுவராஜை கொடூரகொலை செய்ததாக கைது ஆனார். இந்த வழக்கில் கொலை சாட்சியாக இருந்த யுவராஜின் தாய் அவர் தங்கை என இருவர் அடுத்தடுத்து கொலையுண்டனர். இந்தக்கொலை விவகாரத்திலும் முருகன் தரப்பு கைவரிசை இருந்ததாக கும்மிடிப்பூண்டி போலீசார், ஏழுபேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். யுவராஜ் கொலை வழக்கு, பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், அவரது தாய் மற்றும் தங்கை கொலை வழக்கு, திருவள்ளூர் நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. யுவராஜ் கொலை தொடர்பான இறுதி விசாரணை நேற்றுமுன்தினம் (12.10.2023) மாலை நடைபெற்றபோது, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான முருகன், சண்முகம் ஆகிய இருவர் உடல்நலக்குறைவால் முன்னரே இறந்துவிட்ட நிலையில் எஞ்சிய மணி, தங்கராஜ், ராமச்சந்திரன், ஸ்ரீராமுலு, ராமமூர்த்தி ஆகிய ஐந்து பேருக்கு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி, வாழ்நாள் சிறை தண்டனை (ஆயுள்சிறை) அளித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து குற்றவாளிகள் ஐவரையும் போலீசார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நீதிமன்றம் முன்பாக அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். யுவராஜின் தாய் (ம)தங்கை கொலை செய்யப்பட்ட வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
PKM