Madras Kural

ஜர்னலிஸ்ட் முஸ்தபாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் விருது.

முஸ்தபா ! பெயர் சொன்னால் தரம் விளங்கும் என்கிற அளவு நேர்த்தியான ஜர்னலிஸ்ட். உச்ச அன்பு, உச்ச கோபம், உச்ச சமூக அக்கறை என எல்லாமே உச்சம் தொட்டு நிற்கும் ஒரு இமேஜின் பெயரே முஸ்தபா.
பெருந்தொற்று (கொரோனா) காலகட்டத்தில் சிறப்பான சேவையை அளித்த பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம், விருது – பாராட்டு பத்திரம் வழங்கியிருக்கிறார். அதே நிகழ்வில் முஸ்தபாவுக்கும் விருதளித்து பாராட்டியுள்ளார். வடசென்னை எம்.பி., டாக்டர் கலாநிதி வீராசாமி, திமுக மாவட்டச்செயலாளர் தா. இளைய அருணா, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பாலாஜி, ஆர்.எம்.ஓ., நாராயணபாபு, மருத்துவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
செல்போனை தவறவிட்டு நடுவீதியில் செய்வதறியாது நின்ற பெண்மணி, பெற்றோரின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் போய்விட்ட வாகன ஓட்டி மீதான நடவடிக்கை, சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் நடைபாதை வாசிகளுக்கான தீர்வு – இப்படி நான் பார்த்த வரையில் பல்வேறு தீர்வுகளின் நாயகனாக முஸ்தபா இருந்திருக்கிறார்!

அடிப்படையில் கேமரா கலைஞன் முஸ்தபா !
காலையில் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் அந்தக்கேமராவை நள்ளிரவுக்குப் பின்னே கீழிறக்கி வைக்கும் அளவு உழைப்பு -உழைப்பு- உழைப்பு !
விழாக்கள், விபத்துகள், பொதுக்கூட்டங்கள், கொலை, கொள்ளை போன்றவைகளை தொழில் ரீதியாக சுட்டுத்தள்ளும் முஸ்தபாவின் கேமராவில் நான்கைந்து நபர்கள் பயன்பெறும் வகையிலான காட்சிகளும் சத்தமின்றி படம் பிடிக்கப் பட்டிருக்கும் !
பிறருக்கான நியாயம் கேட்டு மட்டுமே கோபப்படும், முன்கோபி !
தன் மீதான தாக்குதலை, ‘பரவாயில்லே’ என கடக்கும் பக்குவம் –
எளிதில் பழகிவிடும் எளிமை ! எளிதில் கலங்கிப் போகும் குழந்தை !
எல்லோருக்கும் பயன்படு ! குடும்பத்துக்கும் கொஞ்சம் பயப்படு !
பிள்ளைகள் இருக்கிறார்கள் – அவர்களுக்கு நீ மட்டும்தான் சொத்து !
பேரன்பு முஸ்தபா !
என்றும் அன்புடன் ந.பா.சேதுராமன்
(02.06.2022)

Exit mobile version