
மற்ற துறைகளை விட பத்திரிகைத் துறையில் ஓய்வூதியம் பெற, அதிகம் போராட வேண்டிய நிலை இருக்கிறது. நேரடியாக இதில் மாநில அரசாங்கத்தின் பங்களிப்பு அதாவது கண்காணிப்பு இல்லாததே குளறுபடிகளுக்கு காரணம்.
- ஐம்பத்தியெட்டு வயதில் பணி ஓய்வு பெறும் பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. பல்வேறு சூழல்களால் முப்பதாண்டு பணிக்காலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்து முடித்திருப்பார்கள்.
ஓய்வூதியம் பெற வேண்டிய காலகட்டத்தில், இவர்களால் ஒரே நிறுவனத்தின் சான்றை வாங்க முடியாது. முன்பு பணியாற்றிய ஒவ்வொரு நிறுவனத்திடமும் போய் நின்று, அனுபவச்சான்றை வாங்க வேண்டும். ஓரிரு நிறுவனங்கள் தவிர – பெரும்பாலான நிறுவனங்கள் ஆகாத சம்பந்தி போலவே அப்போதெல்லாம் கதவை பூட்டிக் கொள்ளும் நிலை. சில நிறுவனங்கள் (நிறையவே அப்படித்தான்), சான்றுக்காக வந்திருக்கும் நபர், வேறொரு அரசியல் (அ) கொள்கை சார்ந்த நபராக இருந்தால் சில ஆண்டுகள் வரை சுற்றலில் விட்டுவிடுவார்கள்.
- ஒரு வழியாக தலா ஆறு ஆண்டு அனுபவம் என ஐந்து நிறுவனங்களிடம் சான்று வாங்கி சேகரித்துக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற செய்தித்துறை வாயிலாக ஒப்புகை பெற்று பத்திரிகையாளர்கள் நிரம்பிய ஓய்வூதியக் கமிட்டியில் அதை ஒப்படைக்க வேண்டும். பின்னர் ஒருநாள் அந்தக்கமிட்டி கூட்டம் கூடும்போது ஓய்வூதியம் கோரிய மனுக்களை படித்துப் பரிசீலனை செய்து, ‘இவருக்கு ஓய்வூதியம் வழங்கலாம்’ என்ற முடிவுக்கு கமிட்டி வர சில மாதங்கள் ஆகிவிடும். ஏற்கெனவே அனுபவச் சான்றை சேகரிக்க சில மாதங்கள் ஓடியிருக்கும். ஓய்வூதியக் கமிட்டி ஒப்புதல் கொடுத்த பின்னர், அது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்குப் போகும். அங்கிருந்து உள்ளூர் சர்வேயர் மூலம், குறிப்பிட்ட முகவரியில் இன்னார் இருக்கிறார்களா என்று தேடி, விசாரித்து, “ஆம். அப்படி ஒரு நபர் இருக்கிறார்” என்று சொல்லியபின், மீண்டும் கோப்புகள் கோட்டைக்குப் போய் அங்கிருந்து உத்தரவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் போகும். பின்னர் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவது உறுதியாகும்.
*அப்படியும் கடந்த காலங்களில் நிறையவே மறுப்பு நிகழ்வுகள் நடந்தது. உள்ளூர் சர்வேயர் (தண்டையார்பேட்டை கோட்டம், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி) நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்துவிட்டு, (2025) “ஓய்வூதியம் பெற தகுதியான நபர் இல்லை” என்று, தினமலர் நிருபர் திரு. எத்திராஜூ மனுவை திருப்பி அனுப்பி விட்டார். வயதான காலத்தில் மகன் வீட்டில் வாழ்ந்திருந்தார் என்று நினைக்கிறேன். சொந்த வீட்டில் இருந்தால் ஓய்வூதியம் இல்லை என்று மனுவை உள்ளூர் ஆர்.ஐ. நிராகரித்ததாக எத்திராஜூ என்னிடம் அப்போது தெரிவித்தார்.
- எனக்குத் தெரிந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி அதே நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ந.பா.சேதுராமன் ஆகிய எனக்கு ஓய்வூதியத்தை தேடிப் பிடித்து கொடுத்தது போல் அல்லவா இருக்கிறது. ஓய்வூதியமோ பத்திரிகையாளர்களுக்கான வீடு ஒதுக்கீடோ இல்லாமலே ஊடக உலகில் நாற்பது ஆண்டுகளை கடந்த மூத்த பத்திரிகையாளர்கள் மாலைமுரசு ம.வி. ராஜதுரை, ‘அறம்’ சாவித்திரி கண்ணன் Ezhumalai Venkatesan டி.வி. சோமு போன்ற பலர் இன்னமும் சாட்சியாக கண்முன்னே நிற்கிறார்களே. (நானும் சீனியர்தான், என்னோட பெயரை எழுதவில்லையே என்று தனியாக யாரும் கம்பு சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம். எனக்குத் தெரிந்து சொந்த வீடற்ற நபர்களாக நான் நெருக்கத்தில் அறிந்த சிலரை சொல்லி இருக்கிறேன். பின்னூட்டில் எழுதுங்கள், சேர்த்து விடுகிறேன்)…
- பத்திரிகையாளர்களுக்கான சங்கங்கள் நிறையவே சென்னையில் உள்ளன. பழமை என்று 75, 50, 100 ஆண்டு சங்கங்களும் 25 ஆண்டுகால சங்கங்களும் யூனியன்களும் உள்ளன. அந்த சங்கங்களின் தலைவர் – செயலர்களை விட மூத்த உறுப்பினர்களுக்கு சீனியர் ஜர்னலிஸ்ட்டுகள் யார் யாரென நன்கு தெரியும். அந்த மூத்த உறுப்பினர்கள் மற்றும் சங்க நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்காத பொன்விழா ஜர்னலிஸ்ட்டுகள் அண்ணன்கள் Duraikaruna தமிழ்மகன் Kathirai Durai Kathir Vel Sathyalaya Ramakrishnan போன்ற பாகுபாடு பார்க்கத் தெரியாத சிலரின் (இன்னும் சிலர் உள்ளனர்) பரிந்துரைக் கடிதம் மட்டும் போதும், #ஓய்வூதியம் பெறலாம் என்று விஷயத்தை எளிமைப் படுத்தி விடலாமே.
- சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் பென்சன் பெற்ற பத்திரிகையாளர் பட்டியலை பார்த்தேன். அவர்களில் ஒருவர் விடாமல் நான் அறிவேன். தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்ட என் கால்களுக்கும் சேர்த்து இரண்டு கண்களை கூடுதலாய்க் கொண்டவன் என்ற திமிரில் சொல்கிறேன். அவர்களில் பலர் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியவர்கள்.
பென்சன் பட்டியலில் மிகக்குறைந்த நபர்களே அறிந்திருக்கக் கூடிய உள்ளூர் ஊடகங்களில் பணியாற்றியது போன்று அவர்களின் அனுபவச் சான்று இருந்ததைப் பார்த்த அன்றே, பாதி செத்து விட்டேன். எத்தனை நிறுவனங்களின் கதவுகளைத் தட்டித்தட்டி ஓய்ந்திருக்கும் அந்த கைகள் ! சில பெரியமனது கொண்ட சில பேராளர் பெருந்தகைகள் அவர்களுக்கு உதவியிருப்பதை புரிந்து கொண்டேன்.
ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தும்,
வீடு கேட்டு விண்ணப்பித்தும் அதற்காக அலைந்தும் திரிந்துமே மரணத்தை விரைந்து வரவழைத்துக்கொண்ட எண்ணற்ற சீனியர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
- பத்திரிகையாளர்களின் வலியும் வேதனையும் முதலாளிகளுக்கும் தெரியும் புரியும் என்று நம்புவது தவளையும் பாம்பும் நட்பு பாராட்டும் கதைதான்.
*காட்சி (விசுவல்) ஊடகத்தில் பணியாற்றியிருந்தால் அந்த ஓய்வூதியமும் கிடையாது. அச்சு (Printing) ஊடகத்தில் வேலை பார்த்து இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் தரப்படும் என்பது எழுதப்படாத சட்டம். பனையோலை ஆணி துணையுடன் ஓலைச்சுவடி எழுதிய முன்னோடிகளின் வாரிசுகளுக்கு பென்சன் கொடுப்பார்களா தெரியவில்லை.
*ஊடக உலகில் சம்பளமே தேவைப்படாத ஒரு ராஜவாழ்க்கையை வாழ்வோரும் உள்ளனர். சம்பளம் ஒன்றை மட்டுமே நம்பி வாழும் பட்ஜெட் பத்மநாபன்களும் உள்ளனர். பாரிஸ்டர் ரஜினிகாந்த் இமேஜ்கள் குறித்து நமக்கு கவலையும் இல்லை – விமர்சனமும் இல்லை.
- நான் குறிப்பிட்டிருக்கும் தகவலின் உண்மைத் தன்மையை சாட்ஜிபிடி மூலமாகக் கூட ஆய்ந்து நல்லதொரு முடிவுக்கு தமிழ்நாடு அரசு வந்தால் அது மிகப்பெரிய வரலாற்றுத் திருப்புமுனையாக ஊடக உலகின் பொன்னேட்டில் பொறிக்கப்படும்.
உண்மையாகவே வீடற்ற ஜர்னலிஸ்ட்டுகள், தகுதியிருந்தும் ஓய்வூதியம் பெறமுடியாத ஜர்னலிஸ்ட்டுகளின் வேதனையை தீர்த்து வைக்க முடியும்…
@Chief Minister of Tamil Na
ந.பா.சேதுராமன்
(01.10.2026)