Madras Kural

ஜன கண மன… வாழ்வியல் சினிமா!

கால் நூற்றாண்டுக்கு படத்தைப் பற்றியே நினைக்கும்படி ஒரு படம் தான் !
தமிழில் வெளியான ’மொழி’ யில் அசத்திய பிரித்திவிராஜ், கைவிலங்குடன் (கர்நாடகா) சிறைக்குள் போகும் காட்சியோடு படம் தொடங்குகிறது !
அடுத்த காட்சி, ஜே.என்.யூ. வை நினைவூட்டும் அடையாளத்தோடு உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம். துறைத் தலைவராக இருந்த பெண் பேராசிரியரின் சாவுக்கு நீதிகேட்டு நடக்கிறது.
அடுத்த காட்சி, சி.எம். பதவிக்கு குறிவைத்து காத்திருக்கும் மந்திரிக்கு எதிராக பல அரசியல் காய்நகர்த்தல்கள் – அதற்கு தீர்வு காண ஓட்டலில் ரூம் போட்டு யோசிக்கும் மந்திரி.


அடுத்த காட்சி, மாணவர்கள் போராட்டத்துக்கு பதில் கிடைக்கிறது. எரித்துக் கொல்லப்பட்ட பெண் பேராசிரியர் கொலை தொடர்பாக நால்வர், போலீஸ் ஏசிபி சஜ்ஜன்குமாரால், (தமிழ் சினிமாவைப் போலவே இவருக்கும் தோள்பட்டை ஸ்டாரில் காமெடி செய்துள்ளனர், அவர் பயணம் செய்ய ஐ.ஜி. அந்தஸ்து காரைக் கொடுத்திருக்கிறார்கள்) கைது செய்யப்படுகின்றனர்.
அடுத்த காட்சி, கொலையாளிகளை சுட்டுக்கொல்வதே தீர்வு என, பொதுமக்கள், கூறும் கருத்தை ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன. மாநில மகளிர் ஆணையத் தலைவியும், என் – கவுண்ட்டரே சரி என்பது போல் பேட்டி அளிக்கிறார். மாணவர்கள் கூட்டமாக கூடி, விசாரணை நடக்கிற ஏசிபி ஆபீஸ் வாசலில் போராட்டம் நடத்துகின்றனர்.
அடுத்த காட்சி, மேட்டர் லீக் ஆனது எப்படி என்று ஏசிபி, கீழுள்ள அதிகாரிகளிடம் கோபப்படுகிறார். டிஐஜி லைனில் வந்து, ‘குற்றவாளிகளைப் பிடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை, நேரில் உடனே வா’ என்று ஏசிபியை அழைக்கிறார்.
அடுத்தகாட்சி, ’யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என் குடும்பத்தையே இழந்து விட்டு நான் தனியாய் நிற்பதும் இந்த உத்தியோகத்தால்தான்… நான் மனசாட்சியை கைவிட்டு ஒரு போதும் செயல்படமாட்டேன்’ என்று சொல்ல்லி சல்யூட் அடித்து விட்டு வெளியே போகிறார், ஏசிபி சஜ்ஜன்ராஜ். படம் பார்க்கும் அத்தனை பேரும், அந்த நொடியிலிருந்து ஏசிபி சஜ்ஜன்குமாரை ஹீரோவாக மனதளவில் ஏற்கிற நிலை உண்டாகிறது.

அடுத்த காட்சி, கொலையாளி அம்மாவிடம் மீடியாக்கள் பேட்டி, ‘அவன் என் மகனே இல்லை’ என்று அவர் குமுறல் ! அடுத்ததாக, எரித்துக் கொல்லப்பட்ட பெண் பேராசிரியரின் அம்மாவின் பேட்டி, ‘அவன்களை என் கவுண்ட்ர் செய்து என் மகள் சாவுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்கிற கண்ணீர் பேட்டி. இது போக, ஜஸ்ட் – இன், ஜஸ்ட் நௌ, பிரேக்கிங், எக்ஸ்பிரஸ் நௌ – என்ற டைட்டில்களில் டிவிக்களில் டிபேட், பேட்டிகள், லைவ்கள் மாறி மாறி போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்தகாட்சி, நான்குபேரையும் கோர்ட்டில் ஒப்படைப்பதற்கு முன், சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலையை நடித்துக்காட்டி ரெக்கார்டு செய்ய ஏசிபி சஜ்ஜன்குமார், ஏட்டு (பசுபதிராஜ் – செம செலக்சன்) , ஒரு ஜீப் டிரைவரோடு ஸ்பாட்டுக்குப் போகிறார். முன்னதாக ஜீப்பில் ஏறும் முன்னர், கொலையாளிகள் என்று காட்டப்படும் நபர்களில் இருவர், ஏசிபியை கலாய்த்து தள்ளுகிறார்கள். நமக்கும் கோபம் வருகிறது.
அடுத்த காட்சி, ஸ்பாட்டில் நால்வரை இறக்கி விட்டு அவர்களை யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் என் கவுண்ட்டர் செய்கிறார் ஏசிபி சஜ்ஜன் ராஜன்.

அடுத்தகாட்சி, எரித்துக் கொல்லப்பட்ட பெண் பேராசிரியரின் தாய், ஆனந்தக்கண்ணீர் பேட்டி, நேஷனல் சேனல்களில் லைவ், டிபேட், பெண்ணிய அமைப்புகளும், மாணவர்களும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். இன்னொரு பக்கம், ‘என் கவுண்ட்டரை எதிர்த்து வழக்கு தொடர்வோம்’ என்கிற குரல்கள்.
அடுத்தகாட்சி கோர்ட். நீதிபதி கிட்டி.
எதிர்தரப்பு அரசு வக்கீலின் பெயர் செம !
நீதிபதியிடம், “யார்ன்னு அவங்களைப் பாத்தாலே தெரியாதான்னு, நீங்களே ஒரு முடிவுக்கு வந்து கேக்கும் அளவுக்கு இங்கே ஜாதி அரசியல் நடக்குது” என்று எதிர்தரப்பு வக்கீல் பிரித்திவிராஜ் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அடுத்த அரைமணி நேர வசன – உரையாடல், தமிழ் சினிமா உலகம் பார்த்திராத ஒன்று !
ஆளுங்கட்சிக்கு டெபாசிட் போகும் என்கிற உளவுத்துறை ரிப்போர்ட்டை பொய்யாக்க உருவாக்கப்படும் கலவரம் பல படங்களில் வந்திருந்தாலும் இதில் கையாளப்பட்டிருக்கும் விதம் அலாதி !


’ஹானஸ்ட்’ அடையாளத்துடன் சுற்றும் பலரின் முகத்திரை இறுதியில் கிழிபடுவது வெகு சிறப்பு.
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி சல்யூட் அடிக்கணும் என்பதை தமிழ் சினிமா ஜாம்பவான்கள், இந்தப் படத்தில் (முன்னாள் டிசிபி அரவிந்த் சுவாமிநாதன் : பிரித்திவிராஜ்) பிரித்திவிராஜ் அடிக்கும் சல்யூட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வழக்கறிஞர் ஒருவர் எத்தனை புலனாய்வு ஆற்றலுடன் இருக்கவேண்டும், அப்படி இருந்தால் வழக்கின் தன்மை எப்படி மாறும் என்பதை இத்தனை துல்லியமாக செதுக்க முடியுமா என்று வியக்க வைக்கும் உரையாடல் – திடீர் திருப்பங்கள் !

கோர்ட்டில் வாதிடும் பிரித்திவிராஜ்,
”உண்மையானது எது ? சம்பவமா, போலீஸ் சொல்வதா, டிஆர்பிக்காக ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கும் செய்திகளா எது உண்மை?” என்று
கேட்பதோடு கேள்விக்கான ஆதாரங்களை அடுக்கும் காட்சிகள், என்னவோ செய்கிறது !
-ந.பா.சேதுராமன்

Exit mobile version