ஐ,வி.எஃப். In vitro fertilization (ivf) … !
தமிழ்நாட்டில் குறிப்பாய் பெருநகரங்களில் ஐ.டி. கம்பெனிகளுக்கு இணையாக முளைத்திருக்கும், செயற்கைமுறை கருத்தரிப்பு மையங்களின் மூன்றெழுத்து மந்திரம்! தற்போது, டீக்கடைகளுக்கு சவால்விடும் அளவில் மேற்படி மையங்கள் அதிகமாகி உள்ளது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே, ‘வீட்ல விசேஷமா?’ என்று கேட்கும் மக்களும், “நாங்கதான் கொஞ்சநாள் போகட்டும்ன்னு தள்ளிப் போட்டிருக்கோம்” என்கிற தம்பதிகளும், அன்றாடம் நம் கண்முன்னே பார்க்கிறவர்கள்தான் !
நகர்ப்புறங்களில் குழந்தைப்பேறு தள்ளிப்போவது என்பது வேறு. நகர்ப்புறங்கள் அல்லாத இடங்களில், குழந்தை பிறப்பு தள்ளிப் போய்விட்டால் ஆணுக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் குடும்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
குழந்தை இல்லாத இளவயது இணைகள் மட்டுமல்ல, நாற்பதைக் கடந்து நிற்பவர்களும், குழந்தைப் பேறுக்காக எடுத்திருக்கும் முயற்சிகளைக் கேட்டால், பிரமிப்பும் – வேதனையும் நம்மை திணறடிக்கும்.
அரசாங்கமும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அடிக்கடி நடத்துகிற இலவச மருத்துவமுகாம்களில், ரத்த அழுத்தம், சர்க்கரை, கண், இதயம், எலும்பு போன்றவை குறித்தே அதிகளவு அக்கறை செலுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.
குழந்தைப்பேறுக்கு மட்டும் என்று தனி மருத்துவமுகாமை நடத்தினால், ஒரு வாரத்துக்கு குறையாமல் கூட்டம் இருக்கும், நூறு மருத்துவர்கள் அதற்குப் போதாது – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அவ்வளவு இருக்கிறது.
குழந்தைப்பேறு தொடர்பான தன்னம்பிக்கை முகாம்கள் நடத்தலாம், குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு அடிப்படை என்ன என்கிற ‘டிப்ஸ்’ களை கொடுக்கலாம் – இன்னும் நிறையவே செய்யலாம்.
உலகளவில் வாடகைத்தாய்மார்கள் இந்தியாவில்தான் அதிகம் என்கிறது தரவுகள். வாடகைத்தாய்மார்கள் அதிகம் என்பதில் இருந்தே வறுமையும் அதிகம் இந்தியாவில்தான் என்ற இன்னொரு கோணமும் இருக்கிறது.
வாடகைத்தாய்களை அதிகம் வைத்திருக்கும் இந்தியாவில் குஜராத் தக்க வைத்திருந்த முதலிடம், தமிழ்நாட்டுக்கு மாறி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
உடலில் என்ன பிரச்னை இருந்தால் குழந்தைப் பிறப்பு தாமதமாகும் அல்லது குழந்தை பிறப்புக்கு வாய்ப்பு குறைவு என்று பார்த்து அந்த பிரச்சினையை முதலில் தீர்க்கச் சொல்லுகிற பரந்துபட்ட மருத்துவ தந்தைகள் குறைந்து வருவதும் – உலகளாவிய வணிகப் பார்வை இதிலும் நுழைந்து விட்டதுமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம்! பேறும் வணிகமும் எப்படி நடக்கிறது ?
மாதவிலக்கு நாட்களின்போது கருமுட்டை உற்பத்தியாகிறது. கருவாக அது மாறாத நிலையில் வெளியே தள்ளப்படுகிறது. அந்த முட்டையை தானமாகப் பெற்று, ஆணின் (கணவன்) விந்தணுவுடன் இணைத்து, செயற்கைமுறையில் கரு -தரித்தல் செய்து, சம்மந்தப்பட்ட பெண்ணின் (மனைவி) கர்ப்பப்பையில் வைத்து கருவை (சிசு) வளர்த்தெடுக்கிறார்கள் !
இப்படி கருவைத் தாங்கி சிசுவை வளர்த்து குழந்தையாக்கி பெற்றுக் கொடுக்கும் வரைக்கான கூலியாக ஒரு வாடகைத்தாய்க்கு ரூ. 50 ஆயிரம் என்றளவில் கொடுக்கப் படுகிறது.
வாடகைத்தாயை அழைத்து வரும் தரகருக்கு ஒரு கமிஷன். குழந்தையை உருவாக்கிக் கொடுக்கும் மருத்துவ எக்ஸ்பர்ட்கள் நிர்ணயிக்கும் ஒரு (கமிஷன்) விலை – எல்லாம் சேர்ந்துதான் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியாக மாறுகிறது.
பெரும்பாலான ஊர்களில் வாடகைத்தாய்களை தங்க வைத்து பிரசவம் நடக்கும் வரை இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வாடகை வீடுகள் வரிசையாக நூற்றுக் கணக்கில் இருக்கிறது. வீடுகளின் தொடக்கத்திலோ, முடிவிலோ மகப்பேறு எக்ஸ்பர்ட்களின் மருத்துவமனை இருக்கிறது.
எந்தவகையிலும் இதை வணிகமயமாக – வருமான நோக்கில் செய்யக்கூடாது என்கிறது, (2021- ஆம் ஆண்டு -இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் – மத்திய அரசு வெளியிட்டது) சட்டம் !
இன்றைய பரபரப்பு விஷயமாக இருப்பது ஈரோட்டில் 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டையை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்ததுதான்.
சிறுமியின் வளர்ப்புத்தந்தை, இடைத் தரகராக செயல்பட்ட ஒரு பெண், வேன் டிரைவர் ஆகியோரை ஈரோடு தெற்கு போலீசார், போக்ஸோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட எஸ்.பி., சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மருத்துவப்பணிகள் இயக்குநரக மருத்துவர்கள் குருநாதன், விஸ்வநாதன் தலைமையில் ஒரு குழுவும் விசாரணையில் இறங்கியுள்ளது.
ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள சில மருத்துவமனைகளும் கருமுட்டை விவகாரத்தில் சிக்குகின்றன.
பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாதத்திற்கு ஒரு முறைதான் கருமுட்டை வெளியாகும் என்கிறது மருத்துவ உலகம். ’ஒரு முட்டை மட்டும் போதுமா, அது ஃபெயிலியர் ஆகிவிட்டால் ?’ என்ற கேள்வி எழுவது கருமுட்டை வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இயல்பு. கருமுட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டத்துக்கு புறம்பாக ஹார்மோன் ஊசி செலுத்தி முட்டை – என்பது முட்டைகளாக அதிகரிக்க வைக்கப் படுகிறது. கருமுட்டை கொடுக்கும் பெண்ணின் உடல் ஆரோக்கியம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதோடு பல்வேறு துணை நோய்களும் கூடவே வந்து சேரும்.
செயற்கை முறை கருத்தரிப்பில் தொடங்கி, கருமுட்டை விற்பனை வரை என்று இது முடியவில்லை…
ஆணின் (sperm) விந்தணு வணிகத்தில் நடக்கும் முறைகேடுகள் இன்னும் அதிகம் !
ந.பா.சேதுராமன்