Madras Kural

போதைப் பொருளுடன் சிக்கிய ஈரான் கப்பல் !

நடிகர் சூர்யா நடித்த சிங்கம் சினிமாப்பட பாணியில் கப்பலில் கடத்தி வந்த போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (N.I.B.) அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடத்தல் நபர்கள் 11 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இப்படி கூண்டோடு சிக்கியுள்ளது. அந்தமான் கடல் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியின் போது சந்தேகத்துக்குரிய வகையில் இந்திய கடல் எல்லையில் நுழைந்த ஒரு படகை மடக்கிப் பிடித்தனர். ஈரானைச் சேர்ந்த அந்த விசைப்படகில் 11 பேர் இருந்தனர். படகில் இருந்த 11 பேரையும், போலீசார் சோதனை செய்ததில் அவர்கள் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக படகையும், அவர்கள் 11 பேரையும் போலீசார் கரைக்கு கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து உடனடியாக என்.ஐ.பி.க்கு தகவல் கொடுத்தனர். மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்.ஐ.பி.) எஸ்.பி., (கண்காணிப்பாளர்) ஜிதேந்தர் தலைமையிலான அதிகாரிகளிடம் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் போதைப் பொருள்களையும், 11 பேரையும் ஒப்படைத்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு, போதைப் பொருளையும், கடத்தல் ஆசாமிகளையும் போலீசார் கொண்டு சென்றனர். பிடிபட்டவர்கள் யார்- யார்? என்னென்ன போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது? எத்தனை கிலோ, அதன் மதிப்பு என்ன போன்ற எந்த தகவலையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
கார், பேருந்து, ரயில், விமானம் மூலமாக கொண்டு வரப்படும் போதைப் பொருள்கள் இப்போது கடல் பயண மார்க்கத்தையும் விட்டு வைக்க வில்லையே என்று போதைத் தடுப்புப் பிரிவு போலீசாரும் கடலோரக் காவல்படையினரும் வேதனையடைந்துள்ளனர். – ந.பா.சேதுராமன் –

Exit mobile version