Madras Kural

ஃபாரக்ஸ் முதலீடு ! கோடியில் மோசடிகள்… எக்ஸ்பர்ட் கருத்து !

பிட்காயினில் முதலீடு, ரூ. 1கோடியே 80லட்சம் வரை மோசடி என்ற தகவலுடன் ஒரு செய்தி நம் காதுக்கு வந்தது. பிட்காய்ன் பெயரால் மோசடி என்றதும் அதிக கவனத்துடன் விவகாரத்தைக் கவனித்தோம். அதாவது, சென்னை திருமங்கலம், குற்றப்பிரிவு போலீசுக்கு ஒரு புகார், வந்திருக்கிறது ! ஃபாரக்ஸ் எக்ஸ்போர்ட் – ஆன் -லைன் வர்த்தகம் (Website Forex Export -online Trading) மூலம் நடந்த மோசடி என்கிறது முதற்கட்டத் தகவல்.
புகாரின் சாராம்சம் : சென்னை அண்ணா நகர, ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர், ரவி நபேரா. மகாராஷ்ட்ரா மாநிலம், சூரத் அடுத்த புனேவைச் சேர்ந்த பிரகாஷ், இவருக்கு அறிமுக நபர்..
மார்ச் 2021- வரை சிறுகச்சிறுக ரூபாய் 49 லட்சத்தை பிரகாஷ் சொன்னபடி, ஃபாரக்ஸ் எக்ஸ்போர்ட் – ஆன் -லைன் வர்த்தகம் (Website Forex Export -online Trading) மூலம் ரவி நபேரா, பணத்தை முதலீடு செய்துள்ளாராம்.
ரவி நபேரா எதிர்பார்த்த லாப ரிசல்ட் ஏதும் வராமல் போகவே, தாம் ஏமாற்றப்பட்டதாகக் கருதி ரவி நபேரா போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
புனேவில் இருக்கும் பிரகாசை சென்னைக்கு வரவழைக்க, அதிகமான முதலீடு செய்ய உள்ளதாக தகவலைக் கொடுத்து, பிரகாஷை கூப்பிட்டுள்ளார், ரவி நபேரா.
ரவி நபேராவின் அழைப்பை ஏற்று, பிரகாஷோடு புனேவில் இருந்து சுரேஷ் என்ற இன்னொரு நபரும் சென்னை வந்துள்ளார்.
சென்னை ஏர்போர்ட் அருகேயுள்ள ஹோட்டல் சதர்ன் கம்போர்ட்டில் அறை எடுத்து புனே ஆசாமிகள் இருவரும் தங்கியுள்ளனர்.
புனேவில் இருந்து பிரகாஷோடு, சுரேஷ் என்ற இன்னொரு நபரும் வந்திருக்கும் தகவலை, திருமங்கலம் க்ரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பிரகாஷ் மற்றும் சுரேசைப் பிடித்து விசாரணை நடத்திய பின், அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் கவனத்துக்கு விஷயம் கொண்டு போகப்பட்டது.துணை கமிஷனர் நடத்திய அடுத்த கட்ட விசாரணையில், இதுநாள் வரை ரவிநபேரா, ரூ.1 கோடியே 80 லட்சம் வரையில் பிரகாஷூக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
நம்ம காதுக்கு வந்த, ‘பிட் காய்ன் மூலம் 1 கோடியே 80 லட்சம் வரை மோசடி’ என்ற விவகாரத்தை இதில் எப்படி இணைத்துப் பார்ப்பது என்ற கேள்வியோடு எக்ஸ்பர்ட்டுகள் சிலரிடம் கேட்டோம்.
நம்மிடம் பேசிய சங்கரநாராயணன், ”சார், ஃபாரக்ஸ் எக்ஸ்போர்ட் என்றாலே, அது அந்நியச் செலாவணி மோசடி விவகாரத்துக்குள் அடங்குகிற ஒன்று. ’பெமோ’ சட்டத்தின் கீழ் இப்படி பணப் பரிவர்த்தனை செய்வது குற்றம். ஆன் -லைன் வர்த்தகம் (Website Forex Export -online Trading) என்பது இவர்களாக ஏதாவது சொல்வது…
பிட்காய்னில் முதலீடு என்றுதான் வெளியில் சொல்லிக் கொள்வார்கள், பிட்காய்னில் இவ்வளவு பெரிய தொகையை வரைமுறை இல்லாமல் யாரும் முதலீடு செய்வது கிடையாது. பிட் காய்ன் என்பது ஊக வணிகம். இப்படிப்பட்ட மோசடிக்கு அதில் வாய்ப்பும் இல்லை. பணத்தை ஏமாந்தவர்கள், ‘ ஃபாரக்ஸில் முதலீடு, பண பரிவர்த்தனை’ என்று புகார் கொடுக்க முடியாது என்பதால்தான் புகார் தன்மையை திசை திருப்பி, ‘பிட்காய்னில் முதலீடு – மோசடி’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.
எக்ஸ்பர்ட்டுகள் சொல்வதைப் பார்த்தால், புகார் கொடுத்தவர்களையும் விசாரிக்கணும் போலிருக்கு.

-ந.பா.சேதுராமன் –

Exit mobile version