Madras Kural

அண்ணாச்சியின் ’லெஜண்ட்’ விநியோகஸ்தர்,
சினிமா முதலீட்டாளர்கள் வீடு -ஆபிசில் ரெய்டு !


சினிமாப்படத் தயாரிப்பாளர்கள், சினிமாப்படங்களுக்கு முதலீடு செய்கிறவர்கள், தியேட்டர் விநியோகஸ்தர்கள் என வருமானவரித்துறை (ஐ.டி.,) அதிகாரிகள், ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
வர்த்தக உலகில் கொடிகட்டிப் பறக்கிறவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அண்ணாச்சி. அண்மையில் அவர், கதையின் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் லெஜண்ட். முதல் படத்திலேயே அதிக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான, அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட படம் என்ற தகுதியைப் பெற்ற படமாகவும் லெஜண்ட் இடம் பிடித்துள்ளது.


லெஜண்ட் படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை
அதிகளவில் எடுத்திருந்தவர், மதுரையைச் சேர்ந்த சினிமா முதலீட்டாளர் அன்புச்செழியன் ஆவார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2 -2022) காலையிலிருந்து அன்புச்செழியனின் மதுரை மற்றும் சென்னை காம்தார் நகரிலுள்ள அவரது வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடந்தது.


சென்னை திருவல்லிக்கேணி, தியாகராயநகர் மற்றும் மதுரையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை (ஐ.டி.) ரெய்டில் ஈடுபட்டது.
சென்னையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.


அதேபோல் திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராயர் நகரில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்தில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சினிமாப்படத் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு வீடு மற்றும்
ஞானவேல் ராஜா அலுவலகம் என வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரேநேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தியாகராயர் நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சேரான்

Exit mobile version