
திருவள்ளூர் அருகே பாதாள சாக்கடை திட்ட பணிக்காக உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து கொக்கி மூலம் நேரடியாக மின்சாரம் (திருடி) பயன்படுத்துவதால் கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையை, அலட்சியத்துடன் அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கடந்த 2013-ல், 74 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுக்குள், (2016- முடிவதற்குள்) கட்டுமானப் பணிகளை முடித்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தனியார் நிறுவனத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது.
சற்றேர 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே புதைக்கப்பட்டுள்ள ராட்சதக் கழிவுநீர்த் தொட்டியில் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய தண்ணீர் கொண்டு வரப்பட்டு அது ராட்சத தொட்டியில் நிரப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக (ஜெனரேட்டர்) எனப்படும் மின்னாக்கி மூலம் மின் மோட்டாரை இயக்காமல், நேரடியாக அந்தரத்தில் சென்று கொண்டிருக்கும்; உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து கொக்கி போட்டு; சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி பயன்படுத்துவதால்; அதிலிருந்து மின் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் ஒன்றை ஒன்று முந்தி கூட்டமாக அந்தப் பகுதியில் முந்திச் செல்லும்போது, அந்தரத்தில் தொங்கும் திருட்டு உயர் மின்சார வயர்கள் அதன் உடலில் மிக சாதாரணமாகவே பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். மேலும் கால்நடைகளின் உடலில் எங்காவது மின்சார வயர்கள் சிக்கிக் கொண்டாலோ, அவைகள் இழுத்துச் செல்லப்படுவதற்கும் வாய்ப்பு அதிகம். அதுபோன்ற சூழலால் ஏற்படும், அழுத்தத்தின் காரணமாக உயர் அழுத்த மின்கம்பி கீழே அறுந்து விழுந்து அதன் மூலம் மின் கசிவும் உண்டாகும். பாதாள சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த வழியாக சாலையை கடந்து செல்லும் பொதுமக்களின் உயிருக்கும் இதன் மூலம் ஆபத்து ஏற்படக்கூடும்… இதையெல்லாம் சற்றும் உணராமல் பொறுப்பெற்ற முறையில் நடந்து கொள்ளும், அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன். கோ.முத்து