
படம் : மாடல் மட்டும்
குண்டலினி (எ) ராஜயோக தியானப் பயிற்றுநர்கள் உலக முழுவதும் உள்ளனர். வணிக ரீதியிலும், இன, குழு, மத, வர்க்க ரீதியாகவும் பயிற்றுநர்கள் எனப்படும் குருமார்கள் (அ) ஆசான்கள் உள்ளனர்.
மேலே குறிப்பிட்ட எதற்குள்ளும் ஆட்படாமல், “யாவரும் நாடி வரலாம், யாவரும் ராஜயோக பயிற்சியை பெற்றுச் பெறலாம், அதுவும் கட்டணம் இல்லாமல்” என்று கடைவிரிக்கும் பெருந்தகைகளை மக்களே ‘மகான்- சித்தர்’ என்று அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி தன்னலம் கருதாமல் வாழ்ந்து தவப்பயிற்சியை உலகமுழுவதும் இலவசமாகவும் எளியமுறையிலும் கொண்டுபோய் சேர்த்தவர் பரஞ்சோதி மகான். ராமநாதபுரத்தில் பிறந்தவர். சென்னை டோல்கேட் (தங்கம் மாளிகை) பக்கத்தில் இவரது நினைவிடமான உலக சமாதான ஆலயம் இருக்கிறது.
இப்படிப்பட்ட மகான்களை தேடிப்போய் தீட்சை எனப்படும் தியான – தவப் பயிற்சியை கற்றுத் தேர்ந்தோர், பிற்காலத்தில் தாமும் ஒரு கடைவிரித்து, மகான்களைப் போன்றே உடையிலும் நடையிலும் தம்மை மாற்றிக்கொண்டு
‘நான் கடவுள்’ (I GOD) என்றே அறிவிப்பும் கொடுத்து விடுகிறார்கள். அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்த ‘கார்ப்பரேட்- கடைவீதி (!)’ க்கு போக நேர்ந்தது.
“இன்று முக்கியமான சத் சங்கம். அருமையான ஸ்பீச் கொடுக்கிறார்கள். யாரும் அறியாத விஷயங்களைப் பேசக்கூடிய தீர்க்க (?) தரிசிகள் வருகிறார்கள், நீங்கள் வந்தே ஆக வேண்டும்” என்று கட்டாயப் படுத்தி கூட்டிப்போய் ஜோதியில் கலக்க வைத்து விட்டது நட்புக்குழு. நிறையவே பேசினர்.
அழகான மலையடிவாரம். மலைக்கு கீழே அருளாசி மண்டபம். + மண்டபங்கள். அதற்குள்ளே குருமகான். தலைமை சீடர்கள், உதவி தலைமை சீடர்கள், சீடிகள். குரு தொண்டு புரியும் தன்னார்வலர்கள். மலையைச் சுற்றிலும் கரடிகள், நரிகள், எறும்புத் தின்னிகள் அதிகம் இருப்பதாக சொன்னார்கள்.
“இங்கு வந்தபின்னர்தான் எனக்கு ரியல் எஸ்டேட்டில் பணம் கொட்டியது” என்று தொடங்கி ஆளாளுக்கு அவரவர் தொழிலில் அடைந்துள்ள மேன்மைக்கு நடுநாயகமாக அமர்ந்திருக்கும் குருபிரான்தான் காரணம் என்று சொல்லி சிலாகித்துக் கொண்டனர்.
‘ஆசி பெற்றுக் கொள்ளுங்கள், உங்களைத்தான் குரு, பார்க்கிறார், இப்படி யாரையும் குரு பார்த்தது இல்லை’ என்று உயரம் குறைந்த என் நண்பர் எக்கி எக்கி என் காதுக்குள் உந்தினார் வார்த்தைகளை. ‘புதுசா யாராவது வந்தால் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் கவனிக்கத்தான் செய்வார்கள், விடு நண்பா’ என்றேன். நண்பர் விடவில்லை.
‘தப்பு பண்றீங்க சார். பேசாம ஆசிர்வாதம் வாங்கிடுங்க. எல்லாப்பிரச்சினையும் சூரியனை கண்ட பனி போல விலகிடும். அதோ நிக்கறாரே, அவரு கருப்புச்சட்டை ஒரு காலத்துல. பைக் மட்டும்தான் வெச்சிருந்தார். இப்ப நூறு ஏக்கர்ல தோட்டம், நாலு கிரவுண்டுல வீடு, பத்து காரு பார்க்கிங்குல நிக்குது. எல்லாமே குருமகான் ஆசியால் கிடைத்தது” –
பேசிக் கொண்டே போனார்.
நண்பர் கைகாட்டிய நபரை ஆண்டுக் கணக்கில் அறிவேன். பக்கா ஃப்ராடு. கருஞ்சட்டையெல்லாம் கிடையாது.
“காதல் மன்னன் அடையாளத்தோட மாலைமுரசு ஃப்ரன்ட் பேஜ்ல வந்தானே ………… அவன்தானே இவன். அவனுக்கு குருமகான்தான் இத்தனை கார்களை வாங்கும் அளவுக்கு சக்தியை கொடுத்தார்ன்னா, காதல்மன்னன்கற பேரு வர்ற அளவுக்கு அவனுக்கு பெண்களை கொடுத்ததும் அதே குருமகான் தானா?” என்றேன்.
தட்டில் முந்திரி பொங்கல் வைத்து கதவுக்கு வெளியே என்னை உட்கார வைத்து விட்டு உள்ளே போய்விட்டார் நண்பர்.
பின்னர் நண்பரை சமாதானப்படுத்துவது போல, ‘எங்க அப்பா காலில் கூட விழுந்தது இல்லை நண்பா. வேணும்னா விஜய் சேதுபதி மாதிரி உங்க குருமகானை கட்டிப்புடிச்சு ஒரு முத்தம் கொடுத்துரவா’ என்றதும் உச்ச கோபத்துக்குப் போய் விட்டார்.
தப்பா என்ன சொல்லிட்டேன்!
பலரை வாழவைத்து தானும் சிறப்பாக வாழும் அந்த குருபிரான் என்னைப் போலவே சென்னை உலக சமாதான ஆலயத்தில் பயிற்சி பெற்ற ஒருவர், அவ்வளவுதான் என்பதை மட்டும் அடிக்கடி, அவர் “சந்தோஷம்” என்ற வார்த்தையை உச்சரிப்பதை வைத்துப் புரிந்து கொண்டேன்.
தியானப் பயிற்சி என்பது மனதை ஒரு நிலைப்படுத்த உதவும். மகான்கள் வழி, சித்தர்கள் வழி பயிற்சி என்றால் இன்னும் அந்த பயிற்சிமுறை சிறப்பாக இருக்கலாம், அவ்வளவுதான். இந்தப் பயிற்சிமுறையை கற்றுத் தேர்ந்தால் வானத்தை வில்லாக வளைக்கலாம், மண்ணை பொன்னாக்கலாம் என்பது முழுமையான கற்பனை. முழுமையான ஸ்க்ரிப்ட். கார்பரேட் கவிதை. கதை.
எங்கும் நீக்கமற நிறைந்தவர் கடவுள் என்கிறார்கள். ‘கார்பரேட் சாமியார்’ களும் நீக்கமற நிறைந்தே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அரசின் பல்வேறுதுறை அதிகாரிகள் தான் இந்தவகை சாமிகளின் சாமிகளாக எப்போதும் இருக்கிறார்கள்.
ந.பா.சேதுராமன்