கல்வி கற்கும் போது மனமும் உடலும் ஒரே புள்ளிக்குள் இயங்க வேண்டும், மனம் அலைபாயும்போது ஒரு செயலில் ஈடுபட்டால் வாழ்க்கை நம்மை குப்புறத் தள்ளி குழி பறித்து விடும் என மாணவர்களுக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ. ஏ. எஸ். மாணவர்களுக்கான உரையில் குறிப்பிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் புது வாயலில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வாழ்க்கையில் சில நேரங்களில் எங்கு வளைய வேண்டும் என்பதை தெரிந்தவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான், கல்விக்கு உடல் வளைய வேண்டும் வெற்றிக்கு மனம் வளைய வேண்டும் , எங்கெல்லாம் நம் முத்திரையை பதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அங்கெல்லாம் நம் மனதையும் உடலையும் ஒரே புள்ளிக்குள் இயக்க வேண்டும், இதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியமாக இருக்க முடியும். மனம் அலைபாயும்போது உடல் ஒரு செயலில் ஈடுபட்டால் வாழ்க்கை நம்மை குப்புறத் தள்ளி குழி பறித்து விடும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்.கோ.முத்து