காதலித்து திருமணம் முடித்த பெண்ணை தவிக்க வைத்து விட்டு கஞ்சா விற்கும் பெண்ணோடு சுற்ற ஆரம்பித்தான் கணவன். வயிற்றுக்கு வழியின்றி தகாத பெண்களோடு நட்பு வைத்து வாழ்க்கையின் போக்கையே மாற்றிக் கொண்டாள் அந்தக் காதல் மனைவி. முன்னாள் காதல் கணவனையும் பழி வாங்கத் துடித்தாள். காதல் கணவனோ கள்ளக் காதலியாக மாறிப்போன கஞ்சா வியாபாரியின் துணையுடன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டான். அடுத்தடுத்து திருப்பங்களோடு டி.வி. சீரியல் போல் போகு இந்த நிஜ சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் சிப்காட் பகுதி தெரசாபுரம் கிராம ஏரிக்கரை நிலத்தில், கடந்த 18ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்ட திருப்பெரும்புதூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த பிரியா என்பதும் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. பிரியாவின் காதலன் வெங்கடேசன் மற்றும் பாலியல் தொழில் தரகர் ஜோதி ஆகியோரை, இது தொடர்பாக போலீசார், தகவலின் அடிப்படையில் விசாரித்தனர். பிரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை தீவிரமானது. அப்போது வெளியான தகவல் :
பிரியாவுக்கும் காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நவீனுக்கும் காதல் ஏற்பட்டு இளம் வயதில் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களுக்கு குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. இதற்கிடையில்
பிரியாவின் கணவன் நவீனுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்பனா என்ற கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு ஏற்பட்டு தனியாக பிரிந்து சென்றுள்ளார். ஆதரவின்றி வாழ்ந்த பிரியா, பெண் இடைத்தரகர் ஜோதி மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையின் போக்கை திசைமாற்றி சீரழித்த கணவன் நவீனை பழிவாங்கும் நோக்கில் நவீனை, பொது இடங்களில் பார்க்கும் போதெல்லாம், பிரியா அவமானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், கஞ்சா வியாபாரியான கல்பனா, அவர் தம்பி காளிதாஸ் ஆகியோர், காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து, போலீசாருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். போலீசாரின் ரெய்டில் கல்பனாவும், காளிதாசும் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, பிரியாவை பழிவாங்கத் துடித்துள்ளார். பிரியாவின் முன்னாள் காதல் கணவன் நவீன், கல்பனாவின் காதலன் என்பது இன்னொரு கிளைக்கதை. காதலன் நவீனுடன் கூட்டு சேர்ந்து பிரியாவை கொலை செய்ய கல்பனா திட்டமிட்டுள்ளார். அதன்படி பிரியாவை காஞ்சிபுரத்திலுள்ள ஒரு ஓட்டலுக்கு சமாதானம் பேச வரவழைத்த கல்பனாவுடன் பிரியாவும் நவீனும் கூட்டாக மது குடித்துள்ளனர். பின்னர் மது போதையில் இருந்த பிரியாவை, நவீனும் கல்பனாவும் சேர்ந்து தாக்கியுள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து பிரியாவை கொலை செய்துள்ளனர். பிரியாவின் உடலை அங்கிருந்து பத்திரமாக கொண்டு வந்து தெரேசாபுரம் ஏரிக்கரை நிலத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் – போலீசாரின் விசாரணையில் வெளியான தகவல் இதுதான்!
தலைமறைவாக இருந்த பிரியாவின் கணவன் நவீன் அவனது கள்ளக்காதலியும் கஞ்சா வியாபாரியுமான கல்பனா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காஞ்சிபுரம் பிரியாக்கள் போன்று நாட்டில் பல பிரியாக்கள், கொடூர கணவன்களால் உருவாக்கப் படுகின்றனர்…
-சிவ. சுப்ரமணி.