கொள்ளையடிக்க வந்தவர்கள், கதவை தட்டி காலிங்பெல் அடித்ததால் வீட்டின் உரிமையாளர்கள் சத்தம் போட்டு அலறவே கொள்ளையர்கள் தப்பித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் நான்கு வட மாநில கொள்ளையர்கள் வந்துள்ளனர். பின்னர் சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது, வீட்டின் உரிமையாளர்கள் கதவை உள் பக்கமாக தாழிட்டு தூங்கிக் கொண்டு இருந்ததால் கொள்ளையன் ஒருவன், முதலில் வீட்டின் கதவைத் தட்டியுள்ளான். யாரும் திறக்காமல் போகவே, வாசலில் இருந்த அழைப்பு மணியையும் (காலிங் பெல்) அடித்து பார்த்துள்ளான். வீட்டிலிருந்தோர், சத்தம் கேட்டு, கண் விழித்தனர். ‘யாருப்பா அது?’ என்றபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஓடி வருவதைக் கண்டதும் கொள்ளையர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ராஜ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி காட்சிகளை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
P.K.M.