Madras Kural

இடிந்து விழுவதில் சாதனை படைக்கும் அரசு மருத்துவமனை…

காரைக்காலில் சித்த மருத்துவமனை மேற்கூரை இடிந்ததால் டாக்டர்கள் நோயாளிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்த சோகம் அரங்கேறியுள்ளது.

காரைக்காலில் புதுச்சேரி நலவழித் துறையின் மூலம் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யோகா, ஹோமியோபதி, நேச்சிரோபதி, பஞ்சகர்மா, தொடுவர்மம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவர்கள், ஊழியர்கள், வருகிற நோயாளிகளை உடல் பரிசோதனை செய்து, துல்லியமான சிகிச்சை வழங்கப்படுவதால், வெளியூர் நோயாளிகள் வீடு எடுத்து தங்கியும் இங்கு இங்கு தரப்படும் சிகிச்சையால் பூரண குணமடைந்து செல்கின்றனர்.

பக்க விளைவுகளற்ற சிகிச்சை, மருந்துகள் காரணமாக இந்த மையத்துக்கு தினசரி காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
புதுச்சேரி வில்லியனூரில் இந்த பிரிவுகளுக்காக 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு முழுமையான வசதிகளுடன் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், காரைக்காலில் துவங்கப்பட்ட சித்த மருத்துவப்பிரிவுக்கு நிரந்தரக் கட்டிடம் இல்லை. ஆரம்பம் முதலாகவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மையத்துக்கான நிரந்தர இடம் இல்லாதது ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் பெரும் சவாலாக நீடித்து வருகிறது. முழுதும் சிதிலமடைந்த இக்கட்டிடத்தை காரைக்கால் நகராட்சி ஆய்வு செய்து முழுதும் உபயோகத்துக்கு லாயக்கில்லாத கட்டிடம் என்று 4 வருடங்களுக்கு முன் அறிவித்தது.

இடிந்து விழும் கட்டிடத்திலிருந்து இந்த மருத்துவ மையத்தை வெளியேறவும் நகராட்சி வலியுறுத்தியது. ஆனால், இந்த மையத்துக்கு நிரந்தர கட்டிடம் வழங்கப்படாததால், வேறு வழியின்றி மருத்துவர்களும், ஊழியர்களும் உயிரைப் பணயம் வைத்து இங்கு பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு காரைக்கால் அரசு பொது மருத்துவமனை செவிலியர் விடுதி பழுது பார்க்கும் வேலைகள் நடந்தது. இடைப்பட்ட காலத்தில் செவிலிய அதிகாரிகள் தற்போது சித்த மருத்துவமனை இயங்கி வரும் மோட்டல் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், இந்தக் கட்டிடத்தில் பாம்புகள் நடமாட்டம் இருந்ததாலும், அடிக்கடி கட்டிட கூரை இடிந்து விழுந்ததாலும் பாதுகாப்பு கருதி செவிலிய அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பிறகு இக்கட்டிடத்துக்கு சித்த மருத்துவ மையம் மாற்றப்பட்டது.
புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், சிகிச்சை பிரிவு, யோகா நிலையம் அனைத்துமே இடிந்துவிழும் கட்டிடத்துக்குள் இயங்கி வருகிறது. மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் இங்கு ஒரே கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். பின்னர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் தென்புறம், கால்நடைத்துறை குடியிருப்பை இடித்து, அந்த இடத்தில் சித்தமருத்துவமனை கட்ட முடிவானது. இம்முடிவு என்ன காரணத்தாலோ தள்ளிப் போனபடி இருப்பதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் இக்கட்டிடத்தை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இம்மையம் வேறு இடத்தில் இயங்க நடவடிக்கையையும் எடுத்து வருகிறார். பொதுப்பணித்துறை கட்டிடம் ஒன்றினை இம்மையத்துக்காக சீரமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில், புறநோயாளிகள் பிரிவுக்கு நேராக 2-ம் தளத்தில் தண்ணீர் டேங்க் வைக்கப்பட்ட மேற்கூரை, படிக்கட்டு சடசடவென இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் புழுதி, கான்க்ரீட் இடிபாடுகளுடன் கட்டிட மேற்கூரை விழுந்ததால் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தனர்.

ஏற்கெனவே இக்கட்டிடம் கிட்டத்தட்ட 30 முறை இடிந்து விழுந்ததாகவும், தற்போது மேற்கூரை, படிக்கட்டு இடிந்ததால், இங்கு புழங்குவது பேராபத்தை விளைவிக்கும் என நோயாளிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

தம்பி. மாரிமுத்து

Exit mobile version