Madras Kural

ஹெல்மெட் கட்டாயம்! போலீஸ் எச்சரிக்கை… 5 மாதத்தில் 98 பேர் பலி !

சென்னையில் மட்டுமே கடந்த ஐந்து மாதத்தில் டூ வீலரில் சென்ற 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை இந்த விபத்துகள் உணர்த்துகிறது. சென்னை பெருநகர போக்குவரத்துப் போலீசார் இதன் பொருட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அது குறித்த காவல்துறை செய்திக் குறிப்பு : சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்த, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப் படுகிறது.

சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர், 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 714 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 127 நபர்கள் பின்னிருக்கை பயணிகள் ஆவர்.
விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும். 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர்கள் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் ! இவ்வாறு போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. – விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version