சென்னை புறநகர் ஆவடியை சேர்ந்தவர், ஆகாஷ். 25 வயது. ஜிம் பயிற்சியாளர். திடீரென ரத்தவாந்தி எடுத்து ஆகாஷ் உயிரிழந்ததால், இறப்பு குறித்த விசாரணையை போலீசார் மேற் கொண்டனர்.
விசாரணையில், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஆகாஷ் ஈடுபட்டு வந்ததும் மாவட்ட அளவில் பலமுறை வெற்றி பெற்றதும் தெரிய வந்தது.
உடலை திரட்சியாக காட்டிக்கொள்ள அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததும் அடுத்தக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்டீராய்டு ஊசிகளை செலுத்திக் கொண்டு போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் ஆகாஷின் இரண்டு கிட்னிகளும் செயல் இழந்ததாலே உயிரிழந்ததாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலை வளமையாக திரட்சியாக வைத்துக் கொள்ள இயற்கையாகவே ஏராளமான சத்துக்களை இயற்கை, மனிதனுக்கு கொடையாக கொடுத்து வைத்துள்ளது.
தேகப்பயிற்சி செய்வோருக்கு நம்ம ஊரு மூக்கடலையும் வெளிநாட்டு வித்தான பீட்ரூட்டும் போதுமே, உடலை செழிப்பாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ள…
விரைவில் உடலை தேற்றிக்கொள்ள, போட்டிகளில் வெற்றிவாகை சூட, சப்ளிமெண்ட் எனப்படும் செயற்கை முறையிலான துணை சத்து மாவுகள், மாத்திரைகள், ஊசிகள் நீண்ட கால ஆரோக்கிய நிலைத்தலுக்கு ஒருபோதும் துணை புரியாது.
இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான். இயற்கை சத்துப் பொருள் சேர்க்கைகள், மனித கிட்னிகளை ஒருபோதும் பலவீனப்படுத்துவது இல்லை…
ந.பா.சேதுராமன்