Madras Kural

டிராவல்ஸ் மூலம் குட்கா கடத்தல் அமோகம்!

தமிழ்நாடு அரசாலும் இந்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு இயக்ககத்தாலும் தடை செய்யப்பட்ட பொருட்களில் பான்மசாலா மற்றும் குட்கா அடங்கும். அந்த அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவில் தனிப்படை போலீசார், தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மண்ணடியில் உள்ள ஆப்பிள் டிராவல்ஸ் என்ற பெயருள்ள டிராவல்ஸ் மூலம் குட்காவை பல்வேறு மாவட்டங்களுக்கு சிலர் பார்சல் செய்து அனுப்பி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
கடந்த 16ஆம் தேதியன்று சென்னை பூக்கடை போலீஸ் துணைகமிஷனர் மகேஸ்வரன் நேரடி கண்காணிப்பில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் மண்ணடி நாரயணப்பன் தெருவிலுள்ள ஆப்பிள் டிராவல்ஸில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், டிராவல்ஸ் மூலம் குட்காவை பார்சலில் அனுப்பி வைத்தது உறுதிப் படுத்தப்பட்டது. மண்ணடியைச் சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் மூலமாக பார்சல்கள் தமிழ்நாடு முழுவதும் போய் வந்தது தெரியவே கலீல் ரகுமானை போலீசார் விசாரணைக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் பார்சல் அனுப்பச் சொன்ன நபர்களின் முகவரியை கலீல் ரகுமான் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் அந்த முகவரிகளுக்குப் போன போது அந்த முகவரிகளில் யாரும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கலீல் ரகுமானை மட்டும் தினமும் விசாரணைக்காக வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார், காலை 10.30-க்கு காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தி முடித்து விட்டு மாலை, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் மறுநாள் காலை, கலீல் ரகுமானை வரவழைத்து விசாரித்த போது, தனக்கு நெஞ்சுவலி என்று தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ உடல் தகுதி சோதனை செய்ய அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி அவரை உள்நோயாளியாக ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கச் செய்தனர். பின்னர், அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகும்படி கலீல்ரகுமானுக்கு போலீசார் அறிவுறுத்தினர். தலைமறைவு குற்றவாளிகளாக, ராஜேஷ் (குட்கா உரிமையாளர்), முத்துசாமி (ஆட்டோ டிரைவர்), அன்பு (ஆப்பிள் டிராவல்ஸ் உரிமையாளர்), மணிமாறன் (ஆப்பிள் டிராவல்ஸ் உரிமையாளர்) ஆகியோரை இனம் கண்டுள்ள போலீசார், அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

– ஏ.எஸ்.ராஜ் –

Exit mobile version