கும்மிடிப்பூண்டி தொகுதி தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்எல்.ஏ. மற்றும் திமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வகித்த கி.வேணு, 1989 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவர். இரண்டு முறை திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர்.
திமுக முப்பெரும் விழாவில் (2001) கி.வேணுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. 1975 -ல் எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைது ஆகி சிறையில் அடைக்கப்பட்டார்.
2020-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக பனப்பாக்கத்தில் உள்ள வீட்டில் கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் வைக்கப்பட்டது. கி.வேணுவுக்கு பத்மாவதி என்ற மனைவியும், (மூத்த மகன் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்) ஒரு மகனும், மகளும் உள்ளனர். கும்மிடிப்பூண்டி கி. வேணுவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, மேனாள் அமைச்சர் சா.மு. நாசர், திமுக எம்.பி.க்கள், கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கி.வேணு உடலுக்கு, மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பொன்.கோ.முத்து