
தமிழ்நாடு காவல்துறை எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும், அரசியல் என்ற பாதுகாப்பு அரணோடு, போதைப் பொருள்களை விற்பனைக்காகவும்; சொந்த பயன்பாட்டுக்காகவும்; கை கொள்ளும் களவாணிகளால்; நாளைய தலைமுறைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதை பெருங்கவலையோடு சொல்ல வேண்டியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தியாகேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை வளசரவாக்கம் பகுதி தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு விலையுயர்ந்த ஓஜி கஞ்சாவை, தியாகேஸ்வரன் விற்பனை செய்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து, 10 கிராம் ஓஜி கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, ரூபாய் 27.5 லட்ச பெருமான கார், 8 செல்போன்களை கைப்பற்றினர். கைதான 3 பேரும் வெவ்வேறு நபர்களுக்கு ஓஜி கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட. ரூ. 27.5 லட்சம் பணம் அதிமுகவில் வியூக அமைப்பாளராக செயல்பட்டு வந்த ஹரி என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது.
அதிமுக ஆதரவு சமூக ஊடகப்பிரிவுக்கு மூளையாக செயல்படும் பிரமன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரிடமுமம் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் விற்பனையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடந்ததாக அப்போது சொல்லப்பட்டது.
அடுத்ததாக சேலம் மெய்யனூா் அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 600 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். சேலம் மாவட்ட மெய்யனூா் ராமலிங்கா ஜங்ஷன் பகுதியில் பள்ளப்பட்டி போலீசார், அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, வேகமாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். வேனை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பித்து ஓடிவிட்டார். வேனில் செய்த சோதனையில் உள்ளே 600 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட மினி வேனை பின்தொடா்ந்து காரில் வந்த 3 போ் கும்பல், வேனில் உள்ள பொருள்கள் தங்களுடையது என போலீசாரிடம் தெரிவித்தனா். இன்னொரு திடீர் திருப்பமாக, அவா்கள் குட்கா மற்றும் கஞ்சா கடத்தி வருபவா்களை மடக்கி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்தனர். மேட்டூா் குட்டப்பட்டி கௌதம், பழைய தருமபுரி நாகரசம்பட்டி மணிகண்டன், சங்ககிரி, ஜமுக்காளம்காடு பகுதி அசோக் ஆகிய மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் சிக்கிய கௌதம், நங்கவள்ளி கிழக்கு ஒன்றிய பாமக இளைஞரணி செயலாளராக பொறுப்பில் இருப்பவராம். கட்சியின் இளைஞரணி தலைமையால் சில நாள்கள் முன்னே சிறப்பான முறையில் பாராட்டி விருதளிக்கப் பெற்றவராம், ஒன்றிய இளைஞரணிச் செயலாளரான நங்கவள்ளி கவுதம். போதைக்கு எதிராக கொடிபிடித்து கோஷம்போட்டு போராடும் கட்சிகளின் தலைமைக்கு கிடைத்த அருமையான தொண்டரடிப்பொடிகள்…
ந.பா.சேதுராமன்