Madras Kural

ஜி- ஸ்கொயர் மீதான புகார்கள் தூங்கும் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் நடுக்கடை வீதி, பட்டணம், சூலூர் தாலுகாவை சேர்ந்த ஏ.சண்முகசுந்தரம் என்பவர்
ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது 31.08.2023-ல் முதலமைச்சர் தொடங்கி வட்டாட்சியர் வரை கொடுத்த புகார், இப்போது வரை அப்படியே கிடப்பில் இருப்பதாக சொல்கிறார் மனுதாரர் சண்முக சுந்தரம்.

புகாரில் என்னதான்
சொல்லப் பட்டிருக்கிறது?

சுருக்கமாகவே அதை பார்ப்போம்.

சண்முக சுந்தரமாகிய நான் கூலி வேலை செய்து வருகிறேன். கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பட்டணம் கிராமம், க.ச.105 நெ காலையில் உள்ள பூமியானது எனது தாத்தாவான வடுகப்பகோனார் என்பவருக்கு பாத்தியப்பட்டும், எனக்கு பிதுரார்ஜித வகையில் பாத்தியப்பட்ட சொத்தாகும்.

எனது சொத்திற்கு அருகில் உள்ள பூமிகளை பல்வேறு நிறுவனங்கள் கிரையம் பெறப்பட்டு G Square City என்ற பெயரில் வீட்டு மனையிடங்களாகப் பிரித்து விற்பனை செய்து வந்தனர். மேலும் G Square city க்கு இணைந்தது போல் கிழக்குப் புறமாக G Square City 2.0 என்று மேலும் புதிதாக வீட்டு மனையிடங்கள் பிரித்து விற்பனை செய்ய முற்பட்டனர். G Square city யிலிருந்து G square City 2.0 செல்வதற்காக சரியான வழித்தடம் இல்லை என்றும் ஆதலால் எனக்கு பாத்தியப்பட்ட மேற்படி சொத்தை குறைந்த விலைக்கு கொடுக்குமாறு பலமுறை என்னை கடந்த 2021ம் வருடத்திலிருந்தே கேட்டனர்.
அதன்பின்பு மிரட்டலை வேறுமாதிரி தொடர்ந்தனர்.


G Square City என்ற நிறுவனம் பெயரைச் சொல்லி- அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உயர்ந்த அரசியல் அதிகார மையத்தின்
வழிகாட்டுதலோடு நடந்து வருகிறது…

நிலத்தை எங்களுக்கு நீ கொடுக்கா விட்டால் எப்படி நிலத்தை எடுக்க வேண்டுமென்று எங்களுக்கு தெரியும் என்றும் என்னை மனோஜ் மற்றும் கௌதம் ஆகியோர் மிரட்டி வந்தனர். மேற்படி மனோஜ் மற்றும் கௌதம் ஆகியோர் கோவையைச் சேர்ந்த ராமஜெயம் (எ) பாலா என்பவரின் அறிவுறுத்தல்படியே தான் தாங்கள் செயல்படுவதாகவும் நீ எந்த அதிகாரியிடம் சென்றாலும் எனக்கு ஒன்றும் நடைபெறாது என்றும் கூறி மிரட்டினர்.
இது இவ்வாறு இருக்க 2023ம் வருடம் பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் எனது சொத்து இருக்கும் இடத்திற்குள் மேற்படி மனோஜ், கௌதம் மற்றும் 20க்கும் மேற்படி நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து எனது சொத்தை அபகரிக்கும் கெட்ட எண்ணத்தோடு செயல்பட்டு JCP இயந்திரங்களை வைத்து பயன்படுத்தி சொத்திற்குள் இருந்த எனது பண்ணை வீட்டை இடித்து அங்கிருந்த கிணற்றை மூடி தார்ரோடு அமைத்து விட்டனர். இது தொடர்பாக நான் பலமுறை முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நான்கு நாட்களுக்கு முன்பு எனது சொத்திற்கு அருகில் வந்து G Square City நிறுவனம், யாருடையது தெரியுமா என்று சொல்லி முன்னர் அச்சுறுத்தியதைப் போலவே அதிகார மையம் பெயரைச் சொல்லியே அச்சுறுத்தினர்.

நீ எங்கு புகார் கொடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது, ஆட்சி, அதிகாரம் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் நாங்கள் சொல்கிற பேச்சைதான் கேட்பார்கள். நீ ஒரு அன்னக்காவடி, எங்களது நிழலை கூட தொட்டுப்பார்க்க முடியாது என்று கூறி இனிமேலும் எதாவது புகாரோ, வழக்கோ கொடுத்தால் இருக்கிற இடம் தெரியாமல் பண்ணிவிடுவேன் என்று கூறிதான் என்னை மிரட்டினார்கள். மேலும் மேற்படி பிரச்சனை சம்மந்தமாக நான் சூலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் எனது மூடப்பட்ட கிணறு மற்றும் சொத்த மீட்பதற்காக அசல் வழக்கு எண் 81/2023 தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. எனக்கு மேற்படி சொத்து தவிர வேறு சொத்துக்கள் இல்லை.
அய்யா உரிய நடவடிக்கை எடுத்து என்னையும் என் நிலத்தையும் காப்பாற்றுங்கள்…

இப்படி ஆரம்பித்து நான்கு பக்கத்துக்குப் போகிறது அந்த புகார்.

இப்போது ‘வெர்சன் டூ பாய்ன்ட் ஜீரோ’ வுக்கு விவகாரம் நோக்கி போயிருக்கிறது. ஜி- ஸ்கொயர் என்ற அடையாளத்துடன் வலம் வரும் ராமஜெயம் என்கிற பாலாவின் வித்தைகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்.

அதாவது நில உரிமையாளர்களுக்கு பணத்தைக் கொடுக்காமல் அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டுமனைகளை பிரித்து விற்று அட்வான்ஸ் வாங்கி அதை – நில
உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கிரையம் செய்யாமலேயே ஆண்டுக் கணக்கில் ஜவ்வு போல இழுத்துக் கொண்டே போகிற வேலைதான் இப்போது நடக்கிறது என்கிறார்கள்.

கோவை மாவட்ட உடுமலைப் பேட்டையில் நிலத்தை வாங்காமலே மனையைப் பிரித்து முன்பணம் வாங்கிக் கொண்டு நேரடியாக தமிழ்நாடு அரசுக்கே பட்டை போடும் வேலையை தொடங்கியுள்ளார்.

பேங்க்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் சும்மா இருக்குமா? இதோ இந்த எச்சரிக்கை
பலகையைப் பாருங்கள்.

இது எங்களுக்கு பாத்தியப்பட்டது
உள்ளே வராதே என்று தொழில் முதலீட்டுக்கழகமே எச்சரிக்கை செய்து விட்டு காத்திருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரடியாகவோ
மறைமுகமாகவோ எல்லா கால கட்டத்திலும் வணிகம் செய்வது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும்
அப்படியான அதிகாரசக்தி அரண்போல் பாதுகாப்பு வளையம் அமைத்து காப்பாற்றி வருவதாகவே மக்கள் கருதுகிறார்கள். அதற்கான காரணங்களும் வரிசை கட்டி நிற்பதைத்தான் நாம் கோடிட்டு காட்டி இருக்கிறோம். நிலத்தை பறிகொடுத்து விட்டு கதறுகிற மக்கள் எங்கு போனாலும் நீதி கிடைக்கவில்லை என்றால் இதை வேறெப்படி சொல்வது?

கட்டிமுடித்த கட்டிடத்தை விற்கத்தான் கடை விரிப்பதை பார்த்து இருக்கிறார்கள். ஜி- ஸ்கொயரோ நிலம் இருந்தால் கொடு, நாங்க வாங்கிக்கறோம் என்று கடை விரித்து கூவுவது அதுவும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வது ரியல் எஸ்டேட் தொழிலிலேயே இதுவரை பார்க்காத ஒன்றுதானே… ?

தமிழ்நாடு அரசாங்கம் இதற்கு விரைவில் ஏதாவது ஒரு முடிவை
முன்வைத்தே தீரவேண்டியது
காலத்தின் கட்டாயம்.

-தேனீஸ்வரன்

Exit mobile version