திருவள்ளூர் மாவட்டம் புதுவை பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன சான்றிதழை வழங்கினார். அப்போது பேசிய அவர், “திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று இதுவரை 41 மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது, அதன்மூலம் 49 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், “இதே போன்று நடைபெற்ற சிறிய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 54 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறை ஆணையர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
– தேனீஸ்வரன்