Madras Kural

சென்னை குன்றத்தூரில்
ரூ.26 கோடி அரசு நிலம் மீட்பு !

சென்னை குன்றத்தூர், மேத்தா நகரில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டெடுத்து நிலத்தை மீண்டும் அரசின் சொத்தாக மாற்றியுள்ளனர்.

குன்றத்தூர் – மேத்தாநகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த தனியார் ஒருவர் (பெயரை சொல்ல ஒரு தயக்கமும் இல்லை, அரசாங்கமே தனியார் ஆக்கிரமிப்பு என்றுதான் செய்திக் குறிப்பில் சொல்லியிருக்கிறது) ஆக்கிரமிப்பு இடத்தில் வாழைத் தோட்டம் வைத்திருக்கிறார்.
குன்றத்துார் வருவாய்த் துறையினர், 2022- மார்ச் மாதம் அந்த இடத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான களம் புறம்போக்கு (கலெக்டர் லேண்ட்) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர். வாழைத் தோட்டம் வைத்திருந்த தனியார் தரப்பில், நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. அரசு தரப்பில் தடை உத்தரவை ரத்து செய்ய, அதே நீதிமன்றத்தில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையில் அந்த இடத்தில் மீண்டும் வாழை மரங்கள் வளர்க்கபட்டன. இந்நிலையில் அரசு தரப்பு, வாழைத்தோட்டத்துக் காரரின் தடை உத்தரவை நீதிமன்றம் மூலமாகவே ரத்து செய்தது.திருபெரும்புதுார் கோட்டாச்சியர் சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீசார் பாதுகாப்புடன், ஒன்றரை ஏக்கர் அரசு நிலத்தை இன்று மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் குன்றத்தூர் தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜையும், உடனடியாக போடப்பட்டது.

பிரீத்தி -எஸ்

Exit mobile version