Madras Kural

புழல் ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரப்பு ! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…

திருவள்ளூர் மாவட்ட புழல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராமநத்தம் இடத்தை தனியார் சிலர் போலி ஆவணம் மூலம் பட்டா நிலமாக மாற்றி கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பாக்கம் கிராமத்தில்தான் ஆக்கிரமிப்பு கிராம நத்தம் நிலம் உள்ளது. கால்நடைகளை பராமரிக்கவும், ஊர் பொது திருவிழாக்களை நடத்தவும் காலம் காலமாக சென்றம்பாக்கம் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் போலி ஆவணம் மூலம் அதிகாரிகள் துணையோடு கிராம நத்தம் நிலத்திற்கு போலி பட்டா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆக்கிரமிப்பு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தவும், தனிநபருக்கு வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்யக் கோரியும் சென்றம்பாக்கம் கிராம மக்கள், பல முறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் என விடாமல் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் கிராம மக்கள், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பெரிதானதை தொடர்ந்து கிராம பிரதிநிதிகளை அழைத்து வட்டாட்சியர் ரஜினிகாந்த் பேச்சு வார்த்தை நடத்தினார். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து முறையான ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த நிலத்தை மீட்கவும், அதற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். துறை அதிகாரியின் உறுதிமொழியை ஏற்ற கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

– தேனீஸ்வரன் –

Exit mobile version