சென்னையில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட. ரூ.2 கோடி மதிப்பு கஞ்சா ஹெராயின், கோகைன் மற்றும் ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை வைப்பதற்கான இட வசதி கருதியும், வழக்கு தொடர்புடைய போதைப் பொருட்களை உரிய முறைப்படி அழிக்க குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அரசின் உத்தரவுக்கேற்ப சென்னை போலீஸ் இணை கமிஷனர் ஆர்.வி. ரம்யா பாரதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) துணை கமிஷனர் நாகஜோதி, தடயவியல் துறை துணை இயக்குனர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் இந்தக் குழுவினர் முறைப்படி மனு தாக்கல் செய்தனர். உரிய மாதிரிகள் (Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின், நிலுவையிலுள்ள 13 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1, 026 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது.
போதைப்பொருள் வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு போதைப் பொருள்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. அதன்படி 1300 கிலோ கஞ்சா உள்பட பல்வேறு (முதலில் குறிப்பிடப்பட்ட) போதைப் பொருள்கள் செங்கல்பட்டு, தென்மேல்பாக்கம் கிராமத்திலுள்ள ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் மையத்தில் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது. ந.பா.சேதுராமன்