Madras Kural

அத்திப்பட்டு புதுநகரில் வெள்ளப் பேரிடர் தடுப்பு சுவர்…

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புது நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ள பேரிடர் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்களை பல்வேறு இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. மழை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீரானது, வடிகால் மூலம் கொசத்தலை ஆற்றின் வழியாக கடலில் சென்று கலப்பது தடை படுகிறது. மழைநீரானது இதனால் ஆண்டுதோறும், குடியிருப்பு பகுதிகளை சூழ்வதால் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டருக்கு பேரிடர் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 அடி அகல பரப்பளவு நீர் நிலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பேரிடர் வெள்ள சுவர் தடுப்புச் சுவர், 50 அடி அகலத்திற்கு குறுகியதாக கட்டப்பட்டு வருகிறது . மழையின் போது வெள்ளப்பெருக்கின் வேகத்தில் நீரோட்டம் தடைபட்டு குடியிருப்பு பகுதிகளை மீண்டும் வெள்ளப்பெருக்கு சூழும் ஆபத்து இருப்பதால், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்றி வெள்ளப் பேரிடர் தடுப்புச் சுவரை முறையாக கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் போது அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வட்டாட்சியர் செல்வகுமாரிடம் கடந்த 6-ஆம்தேதி கோரிக்கை மனுவை நேரில் அளித்தார்.

பொன்.கோ.முத்து

Exit mobile version