பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் 2007 ஆம் ஆண்டு, தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் இணைந்து அனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கின. அதன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 500 வீதம், மூன்று அலகுகளில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. 70% தமிழக அரசும், 30% மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
நிலக்கரி கையாளுதல், பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் 1,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தேவை என தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் வாயிலாக வலியுறுத்தி வந்த போதிலும், வல்லூர் தேசிய அனல் மின் நிலைய நிர்வாகம் கோரிக்கையை ஏற்கவில்லை. அதன் தொடர்ச்சியாக அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பாக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 15 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் உண்ணா நிலைபோராட்டத்தை ஏற்று, அனல் மின் நிலைய நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்; அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்; என தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பொன்.கோ.முத்து