
விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளால் கால்நடைகளின் உயிருக்கும் மனித உயிர்களுக்கும் ஆபத்து என்ற புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகள் குறித்த கதையல்ல நிஜம் இது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் விளை நிலங்கள் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதாலும், மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளதாலும் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தில் உரசினாலும், அல்லது தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் உரசினாலும் பேராபத்து. மற்றும் அங்கு விவசாய பணியில் ஈடுபடுபவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பது எதார்த்த நிலை.
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி, மின் கம்பங்களை சீரமைக்ககோரி பலமுறை மக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் சிறிய மழையுடன் வீசிய காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் காலாவதியான, அந்த உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், அவசர அவசரமாக அறுந்து கீழே கிடந்த உயிரழுத்த மின்கம்பியை சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.அடிக்கடி இதுபோன்று உயிரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மாவட்ட நிர்வாகம் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்.கோ.முத்து