Madras Kural

அதானி துறைமுகம்! நேற்றும் இன்றும் நடக்கும் அரசியல்…

பழவேற்காடு -எண்ணூர் பகுதி மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம் 2023-செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது,

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளியில் உள்ள எல்.என்.டி. கப்பல் கட்டும் துறைமுகம் கடந்த 2013 ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. இதன் 97 சதவீத பங்குகளை 1,950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2018-ல் அதானி துறைமுகம் வாங்கியது. அதன்பின் 330 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த துறைமுகத்தை, 6,110 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்வதற்காக மக்கள் பயன்பாட்டில் உள்ள 2,284 ஏக்கர் பரப்பு நிலங்களும், (மீதம் 338 ஏக்கர் நீங்கலாக) கொண்டுவர அல்லது கையகப் படுத்தப்பட்டது. கடல் பகுதியில் 6 கி.மீ. மணல் நிரப்பி 1,967 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள, அதானி நிறுவனம் 2019-ல், தேசிய வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் 4, ஆண்டு கால அவகாசத்திற்குள், சுற்றுச்சூழல் மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை கூட்டத்தின் மூலம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் வாயிலாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் 2021- ஜனவரியில், அதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த (தற்போதைய முதல்வர்) மு.க.ஸ்டாலின், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் பழவேற்காடு -எண்ணூர் பகுதி மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி அதானி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம் செப்டம்பர் 5 (5.9.2023) அன்று காட்டுப்பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சி திமுக, இன்று ஆளுங்கட்சியாக உள்ளது. அதன் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆளுங்கட்சியாக திமுக பொறுப்பேற்ற பின்னர், அதானி துறைமுக விரிவாக்கத்திற்காக பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்களை கையகப்படுத்தவும், அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கும், மத்திய அரசிடம் இசைவு தெரிவித்து அதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருவது காட்டுப்பள்ளி மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

P.K.M

Exit mobile version