
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய (பதிவு பெற்ற) தொழிலாளர்களுக்கு ((கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித் (கொல்லன்), பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் இனங்கள்)) ரூ.45.21 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார்.
இதுபற்றிய தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு : கட்டுமான தொழிலாளர்க்கான ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 22.09.2025 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.800/- வீதம் ஊதியம் (ம) தினசரி உணவு ஆகியன பயிற்சி காலத்தின் போது அளிக்கப்பட்டது. பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு (ம) நிதி சேமிப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவு பெற்றபின் திறன் மதிப்பீடு அடிப்படையில் சான்று அளிக்கப்படுகிறது. பயிற்சிகளைப் பெற்றதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது திறனையும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 22.09.2025 முதல் 18.11.2025 வரையில் வழங்கப்பட்ட பயிற்சியில், 21 ஆயிரத்து 334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள பயிற்சி இலக்கை டிசம்பர் 2025-க்குள் நிறைவு செய்திட தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது – இவ்வாறு குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேரான்