Madras Kural

B.S.P. தமிழ்நாடு தலைவராக அட்வகேட் ஆனந்தன் தேர்வு!

பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு தலைவராக வழக்கறிஞர் டாக்டர் P.ஆனந்தன் தேர்வு.

தந்தை பஞ்சாட்சரம், தாயார் சரஸ்வதி. 1974 -ல் சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் (1992-1997) படித்தவர்.

கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார்.

மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியராக பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100-க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்.

சினிமா நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தியவர். தற்போது 26-ஆம் ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்றவர்.

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்தும் அவரை விடுவித்தவர்.

ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராக இருந்து வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் மறைந்த மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்குடன் 2006 -ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றியவர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றவர்.

தம்பி மதன்

Exit mobile version