Madras Kural

மனிதத் தவறும், போதையும்|

மதுபோதையில் வருவோர் போவோரை எல்லாம் கேவலமாகப் பேசியும், உதைத்தும், கத்தியால் வெட்டுவேன் என்று கூப்பாடு போட்டும் திரியும் பலரை; அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்போம்.
எங்கேனும் ஒரு காக்கி சீருடையைப் பார்த்தால், நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு அதே போதை ஆசாமி; மௌனசாமியாய் மாறிப் போவதையும் பார்த்திருப்போம். போலீசைப் பார்க்கும் முன் போதை ஆசாமியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதையும், அதன்பின்னால் போதை எங்கே போனது என்பதையும் அடுத்தடுத்துப் பார்த்திருப்போம்.

“பாவம்ப்பா… நல்ல மனுசன்தான், தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியாயிட்டா இப்பிடித்தான் ஆயிருவாரு; மத்தபடி மனுசன் கொழந்த மாதிரி” என்று நம்மில் பலர், தற்குறி ஆசாமிகளுக்கு நற்சான்று அளித்திருப்போம்.

போதை, நாட்டைப் பீடித்திருக்கும்
மாபெரும் பிணி. பல உலக நாடுகள் அணுஆயுதத்துக்காக செலவிடும் தொகையை விட, அந்நாட்டு மனிதர்கள் போதைக்காக செலவிடும் தொகை அதிகம் என்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள், இளம் ஐ.டி. ஊழியர்கள்; சக்திக்கு ஏற்றபடி மெத், ஹெராயின், பிரவுன்சுகர், ஸ்டாம்ப் என ‘பப்பு’ களில்; ‘மால்’ களில் மிதக்கிறார்கள்.

வசதி குறைந்தோர் கஞ்சா குடியனாகக் கிடக்கிறார்கள். கஞ்சாவுக்கு வழி இல்லாத போது யாருடைய தாலிக்கொடி கிடைத்தாலும் அறுக்கிறார்கள். பைக் ரேஸ் அதற்கான வடிகாலாய் பலருக்கு இருக்கிறது. இந்த களேபர கூத்தில் டாஸ்மாக்கை நான் சேர்க்கவில்லை.

“வன்முறையில் இறங்குவதற்காகவே பலர் போதையை கையில் எடுக்கிற நிலை எப்போதும் இருக்கிறது. போதை தேடி போகிறவன், அதிலேயே மூழ்கிக் கிடக்கிறவன், வன்முறையை விரும்புவது இல்லை” – என்பதாகவே என் புரிதல் இருக்கிறது.
செய்துள்ள – செய்யப்போகிற அநியாய செயல்களை நியாயப்படுத்த, போதை என்பதை கவசமாகவே, அநேகர் கைக் கொள்ளுகின்றனர் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை -திருத்தணி மார்க்க புறநகர் ரெயிலில் அப்பாவி வட இந்திய இளைஞர், கொடூரமாக போதை இளைஞர்களால் தாக்கப்பட்டிருப்பதும் இப்படியான மனநிலையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.

மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் பேட்டியின்படி, “மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர்தான் நேற்றுமுன் தினம், தாக்குதலுக்கு ஆளானவர். ‘ஏய்… யாரை முறைச்சுப் பாக்கற?’ என்ற ஹீரோ கெத்துடன் கத்தியைக்காட்டி சுராஜை மிரட்டிய நான்குபேருமே சிறார்கள். இருவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பொடியன்கள். இருவர் திருத்தணி -நெமிலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ரீல்ஸ் மோகத்தில் இப்படி செய்துள்ளனர், போதையில் செய்யவில்லை, குற்றப் பின்னணியும் இல்லை. சுராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். சிறார்கள் கூர் நோக்கு மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்” மேட்டர் ஓவர்.

கொடூர மனம் படைத்த அந்த சிறார்கள், சுராஜை கொடூரமாக கத்தியால் தாக்கி ரத்தக் குளியலோடுதான் திருத்தணி ரெயில் நிலைய நடைபாதையில் வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

சென்னை புறநகர் ரயில்கள், கடற்கரை- சென்ட்ரல் மார்க்கத்திலிருந்து கிளம்பி விட்டால், அம்பத்தூர் வரை ஒன்றும் பெரிதாக நடக்க வாய்ப்பு இல்லை. அம்பத்தூர் தாண்டி விட்டால் கூட்டம் இருக்கிற பெட்டிகள் மட்டுமே ஆண் – பெண் இரு பாலாருக்கும் பாதுகாப்பு தரும். கூட்டம் இல்லாத பெட்டிகளில் ஏறிவிட்டால், அதுவும் பெண் பயணியாக இருந்து விட்டால் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்றே சொல்லி விடலாம்…

ந.பா.சேதுராமன்

Exit mobile version