Madras Kural

கொரியரில் போதை மாத்திரை… செல்போனில் கஞ்சா ஆர்டர்… சீரழியும் இளைஞர்கள் !

கஞ்சாவுடன் வந்த கல்லூரி மாணவர்களைப் பிடித்து விசாரணை செய்த போலீசார், மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா மொத்த வியாபாரியையும் கைது செய்தனர் – இது கடந்த 27-ம்தேதி நடந்த சம்பவம். மொத்த கஞ்சா வியாபாரியான ஹரியின் ஆந்திரா தொடர்புகள் குறித்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் லிமிட்டில் முதல்நிலைக் காவலர், சக்திவேல், போலீஸ் ஓட்டுநர் சௌந்தர்ராஜன் நடத்திய வாகனத் தணிக்கையில்தான் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மாணவர்கள் முகமது உசேன், ஜெயேந்திரர் ராஜு வந்த பைக்கில் 200கிராம் கஞ்சா இருந்துள்ளது. இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போதுதான், அவர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்யும் நபரின் விபரம் தெரிய வந்தது. கஞ்சா வியாபாரியிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கஞ்சா வேண்டும் என பிடிபட்ட மாணவர்களை வைத்தே கேட்க வைத்த போலீஸ், கஞ்சாவுடன் வந்தவரை மடக்கிப் பிடித்து கைது செய்தது. மொத்த கஞ்சா வியாபாரியை மடக்க திருவல்லிக்கேணி போலீசார் துணை நின்றனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி. தலைமை காவலர் குமரன்,, முதல் நிலை காவலர் மனோஜ்சிங் ஆகியோர் சம்பவ இடத்தில் மறைந்திருந்து, கஞ்சாவுடன் வந்த கஞ்சா வியாபாரியான கொடுங்கையூர் ஹரியைப் பிடித்துக் கைது செய்தனர்.
ஜாம்பஜார் அபிபுல்லா சாலையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் ஹரி தெரிவிக்க, அந்த வீட்டில் இருந்த பத்தரைகிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயிலில் சென்னை திரும்பி, கல்லூரி மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி விற்று வந்ததால், ஹரி குறித்து யாருக்கும் இதுவரை தெரியாமல் இருந்து வந்துள்ளது. ஹரியின் ஆந்திரா தொடர்பு உள்ளிட்ட பிற விபரங்கள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கஞ்சாவை விட விலை அதிகம் என்பதோடு பெரிய இடத்துப் பிள்ளைகளின் போதைப் பொருளாக இருப்பது கொக்கெய்ன், பிரவுன்சுகர் போன்ற வகைகள். அதேவேளையில், கஞ்சா விற்பனை எந்தக் காலத்திலும் சரிவை நோக்கிப் போனது இல்லை, அந்தளவுக்கு கஞ்சாவுக்கான வரவேற்பு மாணவர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது.
இப்போது கஞ்சாவுக்கு போட்டியாக இன்னொரு வடிவத்தில் வந்திருக்கிறது, போதை மாத்திரை. வலி நிவாரணி மாத்திரைகளை எந்த அளவில் உட்கொண்டால், அது போதையாக மாறுகிறது என்கிற ஃபார்முலாபடி வலி நிவாரணி மாத்திரைகளும் போதை மாத்திரைகளாக மாறிக் கொண்டிருக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரவீன்குமாருக்கு கிடைத்தத் தகவலின் படி (இந்த சம்பவமும் கடந்த 27- ம் தேதிதான் நடந்தது) சென்னை கொண்டித்தோப்பில் ஒரு வீட்டை வளைத்து போலீசார் சோதனை நடத்தினர். டைடால் என்ற மாத்திரையின் பத்து அட்டைகள் (100 மாத்திரைகள்) அந்த வீட்டில் கிடைக்க, வீட்டில் இருந்த கிஷோரை விசாரணையில் கொண்டு வந்தனர்.
கிஷோர் கொடுத்த தகவலின் பேரில் அதேபகுதி பூபதி, மோசஸ் பிரகாஷ், கொடுங்கையூர் அஜீத் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
“ஜி பே – வழியில் ஐயாயிரம் ரூபாய் பணத்தைச் செலுத்தினால்,கொரியர் மூலமாக போதை மாத்திரைகளை அனுப்பி வைப்பார்கள், அதை நான்வாங்கி, ஒரு மாத்திரையை 200 ரூபாய் என்ற ரேட்டுக்கு விற்று வந்தேன்” என்று கிஷோர், விசாரணையில் தெரிவித்துள்ளார். கூகுள் -பே (ஜி -பே) மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு கொரியரில் போதை மாத்திரைகளை அனுப்பி வந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும் தமிழ்நாட்டுக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஊடுருவினாலும், அதிகளவில் ஊடுருவல் செய்துள்ளது கஞ்சாதான் என்கிறார்கள். கஞ்சாவைப் பொறுத்தவரை மற்ற போதைப் பொருட்களை விட விலை மிகவும் குறைவு. இருபது ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரையில் குவாண்டிட்டி – குவாலிட்டி (தரம் – அளவு) என்ற அளவீடுகளில் கிடைப்பது கஞ்சா மட்டும்தான். கஞ்சா தருகிற போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா கிடைக்காத போதும், கஞ்சாவை வாங்க கையில் பணமில்லாத போதும் வழிப்பறி உள்ளிட்ட சமூக சீர்கேடுகளில் துணிச்சலாக இறங்கி விடுகின்றனர். ஆண் குடித்தால் பாதி வீடு எரியும், பெண் குடித்தால் முழு வீடே எரியும் என்பார்கள்… போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் பெண்கள், அதுவும் மாணவப் பருவத்தினர் இன்று அதிகமாகி வருவது அதிர்ச்சியான உண்மை. கஞ்சா தேவைக்காக ஆண்கள் வழிப்பறி என்கிற கொடூர ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள்; பெண்களின் நிலை ? விடை இருக்கிறதா இந்தக் கேள்விக்கு…

மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் வேலையில் போதைக்கு பெரும்பங்கு இருக்கிறது. அப்படிப்பட்ட போதைப்பொருளை பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்குள் கொண்டுவரும் நெட்வொர்க்கின் ஆணிவேரை அறுத்தெறியும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருவது மட்டும்தான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை !
ந.பா.சேதுராமன்

Exit mobile version