Madras Kural

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொடூர கொலை… மகன் வயது 20 !

மதுகுடிக்க பணம் கேட்டிருக்கிறான் மகன். மறுத்திருக்கிறார் தந்தை. பின்னர் உறங்கப் போயிருக்கிறார். அரிவாளோடு வந்த மகன், தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, கிளம்பிப் போயிருக்கிறார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
தந்தை ராமு, நேஷனல் சலூன் என்ற பெயரில் முடிதிருத்தம் செய்யும் கடை நடத்தி வந்திருக்கிறார். மனைவி ரேணுகா. இருபது வயதே ஆன தினேஷ் என்ற மகன். இதுதான் மொத்தக் குடும்பம். உறவினர்கள் யாரும் அருகில் இல்லை.
ரேணுகா அருகில் உள்ள சிப்காட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். தினேஷ் பிளஸ் டூ வரை படித்துவிட்டு வேலைக்குப் போகாமல், மது குடிப்பதையே வேலையாகக் கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார்..
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போன தினேஷ் சென்ற வருடம் மேல்மருவத்தூர் அருகே சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஏப்ரல் 2022-ல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், சில நாட்கள் முன்பு, வீட்டிற்கு வந்துள்ளான்.

உயிரிழந்த தந்தை ராமு

மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த நாள் முதல் மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அதேபோல் மதுஅருந்த பணம்கேட்டு வீட்டில் சண்டை போட்டிருக்கிறார் தினேஷ்.
மகனின் தொல்லை தாங்கமுடியாமல் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொண்டிருக்கிறார் ராமு. மின்சாரம் இல்லாத காரணத்தால் சில நிமிடங்களில் ரேணுகாவும் மொட்டை மாடிக்கு உறங்கப் போய் விட்டிருக்கிறார். பெற்றோருக்கு அருகில் படுத்துக் கொண்டு உறங்காமல் விடிய விடிய விழிந்திருந்த தினேஷ், அதிகாலையில் அம்மா ரேணுகாவை எழுப்பி, ‘மின்சாரம் வந்து விட்டது கீழே போய் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
ரேணுகா கீழேசென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட தினேஷ், மது குடிக்க பணம் தரமறுத்த தந்தை ராமுவின் கழுத்துப் பகுதியில் தயாராய் வைத்திருந்த அரிவாளால் தொடர்ந்து வெட்டியிருக்கிறார். வலியால் துடித்து ராமு அலறல் சத்தம் பெரிதாய் கேட்கவே, ரேணுகா மாடிக்கு ஓடி வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும், அங்கிருந்து ஓடிப் போயிருக்கிறார் தினேஷ்.

கொலையாளியாய் மாறிப்போன தினேஷ்

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் துடித்துக் கொண்டிருந்த ராமுவை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சைக்கு கொண்டு கொண்டு சென்றபின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தினேஷை தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் மதுவுக்கும் கஞ்சா போன்ற போதை புகைக்கும் ஆட்பட்ட இளைஞர்கள், தங்களுக்கான போதைப்பொருள் கிடைக்காத போது மிகவும் மோசமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். பெற்றோரோ, உடன்பிறந்தவர்களோ, நண்பர்களோ யாராக இருந்தாலும் போதை இளைஞர்கள் கவலைப்படுவது இல்லை.
தினேஷின் மதுவெறியால், அவர் மட்டும் தந்தையை இழக்கவில்லை, தினேஷின் சகோதரி திவ்யாவும் தந்தையை இழந்திருக்கிறார். தினேஷின் தாய் ரேணுகா, தன் கணவரை இழந்திருக்கிறார், தினேஷூம் இளமையை சிறையில் கழிக்கும் படியான சூழலுக்கு ஆளாகி வாழ்வை இழந்திருக்கிறார்.
சிவ.சுப்ரமணி

Exit mobile version