ஆணையம் திட்டி விட்டது. ஆணையத் தலைவர் நேரில் வந்து பார்த்து விசாரணை நடத்தி விட்டு, ‘இது மோசமான செயல்’ என்று அவரும் கடிந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சில வாரங்கள் முன்புதான் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த விபரமான அறிக்கையை அதிகாரிகளின் பார்வைக்கு வைத்திருந்தார். இதுபோல் எத்தனை அறிவிப்புகள், வழிகாட்டல்கள் நடந்தும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு என்ற வரையறைக்குள் வராமலே தூய்மைப் பணியில் ஈடுபடுவதும் அடுத்தடுத்து உயிர்களை இழப்பதும் சாதாரண நிகழ்வாகி வருகிறதே.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இன்று காலை லேசான மழை பெய்தது இதனால் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதை தவிர்க்கும் வகையில் நகராட்சி நிர்வாகம், சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது, அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும், தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் முககவசம், கை மற்றும் கால்களில் அணியும் முழு கவச காலணிகள் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
கழிவுநீர் கால்வாயில் உள்ள உடைந்த கண்ணாடி பொருட்கள் அவர்களது கால்களை காயப்படுத்த கூடும் என்ற அக்கறை யாருக்கும் இல்லை. மாதக் கணக்கில் சிமெண்ட் கற்(ஸ்லாப்)களால் மூடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்து விஷவாயு கசிந்து அவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடும் என்பதையா யோசிக்கப் போகிறார்கள்? அண்மையில் அத்திப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் கழிவு நீர் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்ட போது, விஷவாயு தாக்கி மீஞ்சூர் பேரூராட்சியில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் இருவரும், புழல் பகுதியில் வீடு ஒன்றில் கழிவு நீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை அகற்ற சென்ற கூலி தொழிலாளர்கள் இருவரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். அத்திப்பட்டு விஷவாயு மரணம் தொடர்பாக தேசிய பணியாளர் நலஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், விஷவாயு உயிர் இழப்புக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என தனது குற்றச்சாட்டை பதிவு செய்தார். மலக்குழி மரணங்களை தடுப்பது தொடர்பாக சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தொழிலாளர்களை ஈடுபடுத்தும் பொழுது அதில் விஷவாயு கசிவு உள்ளதா என்பது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், தூய்மை பணியின் போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். முதலமைச்சரின் இந்த உத்தரவை அலட்சியப்படுத்திவிட்டு, பாதுகாப்பு கவசங்கள் இல்லாமலே; பொன்னேரி நகராட்சி அதிகாரிகள்; கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்திய சம்பவம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்.கோ. முத்து