Madras Kural

திமுக தோல்விக்குப் பின்னே…

“பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு தவிர அண்ணன் ஆட்சியில் ஒரு குறையைச் சொல்ல முடியுமா?” – 5% அவுட் ! உபயம்: தேமுதிக

“கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை, கேட்ட எண்ணிக்கையும் வாய்க்க வில்லை, கனத்த இதயத்தோடு, கூட்டணி தர்மத்துக்காக உறவைத் தொடர்கிறோம்” – 8% அவுட் ! உபயம் : தோழர்கள்

“இரட்டை இலக்கம் எதிர்நோக்கி இருந்தோம், ஒற்றை இலக்கமே வாய்த்தது, கட்சியில் யாரையும் திருப்திப் படுத்த முடியவில்லை” – 4% அவுட் ! உபயம்: விசிக.

“தொகுதிகள் 28 அல்லது 48 கூட வேண்டாம் ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு மட்டுமே வேண்டும்” (கடைசி வரை கூட்டணியை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்யவில்லை) – 8% அவுட்! உபயம் : காங்கிரஸ்.

“பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது” – சசிகலா -ராமதாஸ் கூட்டணி உதயம். (ஏதோ கொஞ்சம் பர்சன்டேஜ் அவுட். சரியாய் சொல்வதென்றால் 5 தொகுதிகள் காலி) – உபயதாரர் ???

டி.வி. பெட்டிமீது டார்ச் லைட்டை தூக்கி வீசி கோபக்கனலாய் வெளிப்பட்ட ‘மய்யம்’, தனியே நின்று பெற்ற 8% வாக்குகள், திமுக ஜோதியில் ஐக்கியம் ஆனதால் அந்த பொதுவான நபர்களின் 8% வாக்குகளும் காலி.

இப்படி கூடவே சுற்றியும், ஏறக்குறைய 35% வாக்குகளை திமுகவுக்கு எதிராகப் போகும்படியான சம்பவத்தை தரமாக செய்து முடித்து விட்டு, மொத்தத் தோல்விக்கும் சென்னை மந்திரி சேகர்பாபுவும், காஞ்சிபுரம் மந்திரி அன்பரசனும்தான் காரணம் என்பது போல சித்தரிப்பது சரியல்ல.

அன்பரசன்களும், சேகர்பாபுக்களும், இன்னும்- இன்னும், ஒட்டிக்கொண்டே நின்ற சிலரும்; தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காட்டிய அக்கறையை; தங்களை மீறி யாரும் தலைமையை நெருங்கி விடக்கூடாது என்ற தீவிர வெறித்தனத்தை; அந்தந்த மாவட்ட கட்சிக்காரர்களை- அனுதாபிகளை வளர்த்து – அவரவர் சொந்தக்காலில் நிற்க வழி விட்டிருந்தால் தோல்வி பர்சன்டேஜ்களின் பாரன்ஹீட் சற்றே குறைந்திருக்கும்.

காலம் கடந்து விட்டது. தோல்வியை தவிர்த்திருக்க முடியாது. சொந்தக் கட்சிக்காரர்களையே தினக்கூலி ஆட்களைப் பார்ப்பது போல பார்க்கும் அந்த எக்ஸ்ரே கண்களை குருடாக்கிப் போட்டிருக்க வேண்டிய பொறுப்பு தலைமையைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
தவெகவை தற்குறி என்று சொல்வதற்கும், தவெகவில் யாராவது தும்மல் போட்டால் கூட ‘அது குணப் படுத்தவே முடியாத வியாதி’ என்று செய்தியாக்க செலவிட்ட நேரத்துக்கும் திமுகவின் ஐந்தாண்டு மக்கள் பணியை பேசியிருக்கலாம்.

அதே வேளையில்
திமுக அரசாங்கம் செய்து முடித்த மக்கள் பணி ஏராளம். அந்தப் பணியின் மூலம் பரவலாகப் பயன் பெற்றோர் வெகு குறைவு. “எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்ததா?” என நீங்கள் கேட்டிருப்பீர் முதலமைச்சர் அவர்களே. பதிலைச் சொன்ன மந்திரிகளும் அரசு அதிகாரிகளும் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் நம்பியதுதான் முதல் கோணல்.

எல்லாம் முடிந்து விட்டது.
அது நடந்து விட்டது. இனி, என்ன
‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தாலும் பலனில்லை…

செவாலியே சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை அனைவருமே பார்த்திருப்போம்.

அர்ஜூனன் (முத்துராமன்) பாத்திரத்திடம், கிருஷ்ணர் (என்.டி. ராமராவ்) இப்படி விளக்குவார். “கர்ணனை ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவராக கொன்று விட்டு, கடைசி- கடைசியாக உயிர் போகும் சூழலில்; கடைசி அம்பை (த.வெ.க.) நீ எய்துகிறாய் அர்ஜூனா… அவ்வளவுதான்” என்பார். திமுகவை தரையில் சாய்த்தவர்கள் யாரென அனைவருமே அறிவோம்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version