
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (2026) சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வி.வி.ஐ.பி., தொகுதியாக கடந்த ஆண்டுகளில் பிரமாண்டம் காட்டியது, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி.
அதிமுகவைப் பொறுத்தவரை முட்டல் மோதல் எதுவுமில்லாமல் மாவட்டச் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ்தான் அதிமுக வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்ட ஒன்று. தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கி தொகுதியில் அதிமுகவை உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருப்பவர். தொகுதியில் நன்கு அறிமுகமான முகம். இவரும் திமுகவின் மருதுகணேஷ் போலவே தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட அனுபவம் உள்ளவர்.
திமுகவைப் பொறுத்தவரை சிட்டிங் எம்எல்ஏ வான ஜெ.ஜெ. எபிநேசர், ஆர்.கே. நகர் மேற்கு திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் (நாடார் -கிறிஸ்தவர்), அதே ஆர்.கே. நகர் முன்னாள் பகுதி பொறுப்பாளர், முன்னாள் அரசு வழக்கறிஞர், இந்நாள் மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் என். மருதுகணேஷ் (முதலியார் சமூகம்), முன்னாள் ஆர்.கே. நகர் மேற்குப்பகுதி செயலாளரும், இந்நாள் அயலக அணி மாவட்ட அமைப்பாளருமான ஏ.டி.மணி (இந்து நாடார் சமூகம்) என்கிற ஏ. தங்கமணியும் தொகுதியை குறிவைத்து வேலைபார்த்து வருகிறார்கள்.
என்.மருதுகணேஷ், தொகுதியில் திமுக சார்பில் இரண்டு முறை போட்டியிட்டவர். பத்திரிகையாளர், வழக்கறிஞர் என தொகுதியில் அறிமுகம் உள்ளவர். தாயார் பார்வதி நாராயணசாமி (மறைவு) மாமன்ற திமுக உறுப்பினர். ஏராளமான பொதுக் கூட்டங்களை நடத்தியும், தெரு முனை கூட்டங்களைப் போட்டும் தீவிர களப்பணி ஆற்றி வருகிறவர். நட்பு வட்டமும் கட்சி வட்டமும் சிறப்பாக அமைத்துக் கொண்டிருப்பவர். கட்சி நடத்திய போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர்.
ஏ.டி.மணி என்கிற தங்கமணி, ஆர்.கே. நகர் தொகுதியில் கட்சியின் சீனியர். கட்சி நடத்திய போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றதோடு, தொடர்ந்து சிறைக்கும் போயிருப்பவர். ஏராளமான கட்சி பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தியிருப்பவர். நலத்திட்ட முகாம்கள் நடத்தி உடன்பிறப்புகளுக்கு அதிகளவில் பொருள்களை அளித்தவர். குறிப்பாய், டூ வீலர்கள். தென் தமிழகம் வரை சமுதாய மக்களின் தொடர்புகளும், நண்பர்களின் வட்டமும் நிரம்பியவர். ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிகமுறை பணம் கட்டியவர்களில் ஒருவர்.
மருதுகணேஷ், ஏ.டி.மணி, ஜெபதாஸ் பாண்டியன் மற்றும் சிட்டிங் தொகுதி எம்.எல்.ஏ., எபிநேசர் என தொகுதியில் திமுகவில் சீட் கேட்டு நான்கு முனை போட்டி நிலவுகிறது. இது போதாதென சென்னை திமுகவின் கன்ட்ரோலர் என சொல்லப்படும் மந்திரி சேகர்பாபுவும் துறைமுகம் தொகுதியிலிருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாறுகிறார் என்ற தகவலும் வலுவாய் சுற்றுகிறது.
ஆர்.ரவி