
தமிழ்த்திரைப்பட இயக்குநர் இமயம் திரு. கே. பாரதிராஜா (84) மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரைப் பிரிந்து வாடும் அத்தனை உள்ளங்களுக்கும் ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பில் ஆறுதலும் தேறுதலும்…
தமிழ்சினிமா உலகில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி. கூட்டணி என்பது திரை ரசிகர்களுக்கு
மெகா விருந்தளித்த கூட்டணியாக நெடுங்காலம் இருந்தது. இந்தக் கூட்டணி உடைந்தபோதும் பாலு, பாரதிராஜா, இளையராஜா பிரியவில்லை. பாரதிராஜாவோடு இளையராஜாவின் நெருக்கம் இன்னும் அதிகமாகத்தான் இருந்தது. பொதுமேடைகளில் அதை பார்க்கவும் முடிந்தது. பாலுவின் இறப்புக்கு நேரில் போகாமல் திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா, பாரதிராஜாவின் இறப்புக்கு நேரில்
அஞ்சலி செலுத்தியதோடு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அளவுக்கான நெருக்கத்தை பார்க்கமுடிகிறது.
ஆகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் பாரதிராஜா. தமிழ் தேசிய அமைப்புகளோடு நேரடியாய் களம்காணா விட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரம், முல்லைப்பெரியாறு, காவிரி என அத்தனை போராட்ட முன்னெடுப்பிலும் முதல் ஆளாக முகம் காட்டியவராக பார்க்க முடிந்தது. மத்திய அரசு அளித்த பத்மஸ்ரீ விருதை இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மறுதலித்த மாமணி திரு. பாரதிராஜா.
கல்லூரி மாணவன் கார்த்திக் ஆகட்டும், கடலோரக் கவிதைகள் சத்யராஜ் ஆகட்டும் வேட்டியே நிற்கவில்லை என்றாலும் வலிந்து வேட்டிகட்டி தமிழழகு பார்த்து மகிழ்ந்தவர், கடைசிவரை வேட்டியே கட்டாத ஜீன்ஸ் இளைஞனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஜீன்ஸ் காதலன். நாயகனாய் அவரே தோன்றிய கல்லுக்குள் ஈரம் சினிமாவில் கூட ஜீன்ஸ் அணிந்தே தோன்றினார்.
பரட்டை, மயில், சப்பாணி, பொன்னாத்தா, சின்னப்பதாஸ் போன்ற படைப்புகளின் மூலம் நம் நெஞ்சங்களில் எப்போதும் நிறைந்திருப்பார்.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், சென்னையில் நடிகர் ரா.பார்த்திபனின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கலைஞர் தலைமை. எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் சிறப்பு விருந்தினர்கள். விழாவில் மேடையை அலங்கரிக்கும் அனைவருமே வேட்டி கட்டி வரும்படி நூலாசிரியர் ரா.பார்த்திபன் வேண்டுகோள் வைத்திருந்தார். பாக்யராஜ் சாரை முதல்முறையாக வேட்டிகட்டி அந்த மேடையில்தான் பார்த்தேன். புது மாப்பிள்ளை போல நெளிந்தார். ஆறடிக்கு மேல் நெகுநெகுவென நீண்டு வளர்ந்த மெல்லிய தேகத்துக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் சுஜாதாவையும் முதல்முறையாக வேட்டிகட்டி அப்போதுதான் பார்த்தேன். இயக்குநர் இமயத்தின் வரவை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, நீலக்கலர் ஜீன் – டி-சர்ட் அணிந்தபடி அரங்கில் நுழைந்தார் பாரதிராஜா.
“என்னய்யா நீ மட்டும்” ? என்பது போல கலைஞர் பாரதிராஜாவைப் பார்க்க, ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார் பாரதிராஜா. அவருக்கான பேசும் வரிசை வந்தது. மைக்கைப் பிடித்தார். கரகரத்த தேன் குரலில் “என் இனிய தமிழ்மக்களே” என்று தொடங்கி, ” மைடியர் பார்த்திபா… நான் வேட்டி கட்ட மாட்டேன். நான் – நானாகத்தான் இருப்பேன். பழக்கமே இல்லாத ஒரு விஷயத்துக்குள் என்னால் போகமுடியாது, ஆகவே என்னை ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது” என்று உரையில் குறிப்பிட்டார்.
நாட்டின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியே என்ற போதும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத
அந்த நிலைப்பாட்டை ‘இமயம்’ என்றழைப்பதுதானே முறை…
ந.பா.சேதுராமன்
(10.06.2026)