Madras Kural

பத்திரிகையாளர்களின் ‘அக்ரிடேசன் கார்டு – பிரஸ் பாஸ்’ எப்போது தீர்வு?

கோட்டை ஏரியாவில் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும் குமுறல் குறித்து கொஞ்சம் பார்ப்போம்! தமிழ்நாடு அரசு சார்பில் அரசு நிகழ்வுகளை கவரேஜ் செய்ய செய்தியாளர்கள் அழைக்கப் படுவது வழக்கம். அச்சு (ம) காட்சி ஊடக அலுவலகங்களுக்கு அழைப்புக்கான கடிதம், மெயிலில் அனுப்பி வைக்கப்படும். புகைப்பட – வீடியோ ஒளிப்படக் கலைஞரையும், செய்தியாளரையும் அனுப்பி செய்தி சேகரிக்கும்படி அந்தக் குறிப்பில் சொல்லப் பட்டிருக்கும். தவறாமல், ‘அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்’ என்ற குறிப்பும் அதில் கொடுக்கப் பட்டிருக்கும்.

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், (2020) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை, வழக்கத்தில் உள்ளவாறு முழு (ஓராண்டு காலம்) ஆண்டுக்குமான அட்டையாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை தகுதிவாய்ந்த பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய குழுவை (கமிட்டி) அமைக்காமல் வழங்கக்கூடாது என்ற கருத்துடன், சிலர் நீதிமன்றம் சென்றனர். பத்திரிகையாளர் அல்லாத பலர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் அதே கால கட்டத்தில் பரவலாக பேசப்பட்டதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.

விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டதால், செய்தியாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை் முழுமையாய் ஓராண்டு காலத்துக்கு வழங்க முடியாத தர்மசங்கடம் உண்டானது. அரசின் நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்ய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை் வைத்திருப்போர் மட்டுமே அனுமதி என்று செய்திக் குறிப்பில் அனுப்பவும் முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு விவகாரம் முடிவுக்கு வரும்வரை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை குறைந்த கால அளவில் (மூன்றுமாதம்) கொடுக்க, நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் முறையீடு செய்து அனுமதியையும் பெற்ற பின்னரே, ‘கவரேஜ்’ விவகாரம் தற்காலிக முடிவுக்கு வந்தது.

மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் முதல் மூன்று மாதம் அடுத்த மூன்று மாதம் அதன்பின்னர் யாருமே முதலமைச்சராக இல்லாத (தேர்தல்) கால கட்டத்தில் மூன்று மாதம் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை்யையே செய்தியாளர்கள் பெற முடிந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற (2021 – தொடங்கி 2022 – ஜூன் வரையிலும்) பின்னரும் அதே நிலைதான் தொடர்கிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை் கையில் எடுத்துக்கொண்டு, மாநகர பேருந்து டெப்போ தலைமையக அதிகாரியைப் பார்த்து பஸ் -பாஸ் வாங்க, ஆண்டுக்கு ஒருமுறை சென்ற செய்தியாளர்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை செல்லும் சூழ்நிலையும் இதனால் உண்டானது.
மாநகரப்பேருந்து பஸ் -பாஸ் நிலவரம் இப்படியென்றால், ரயில்வே ’பாஸ்’ (பயண அட்டை) நிலை வேறு. மூன்று ’மாதத்துக்கு ஒருமுறை புதுப்பித்து கொடுக்க எங்களுக்கு சூழல் இல்லை, வந்தால் வருடத்துக்கு ஒரு முறை வந்து பாஸ் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று, கை விரித்து விட்டது ரயில்வே நிர்வாகம்!

செய்தி மக்கள் தொடர்புத்துறை – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் செய்தியாளர் அடையாள அட்டை – இரண்டுமே புதுப்பித்தல் (பழைய) அட்டைகள்தான். புதிதாக இரண்டு ஆண்டுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் யாருக்கும் இதுவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையோ (அக்ரிடேஷன் கார்டு) – செய்தியாளர் அடையாள அட்டையோ (பிரஸ் பாஸ்) வழங்கப்படவில்லை (என்கிறார்கள்)…
மூன்று மாதம் -மூன்றுமாதம் என்று புதுப்பித்தலை மாற்றவும், புதிதாய் விண்ணப்பித்த நபர்களுக்கு அடையாள அட்டையை வழங்கவும்
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை, சட்ட ரீதியில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர், பத்திரிகையாளர்கள் ! ந.பா.சேதுராமன்

Exit mobile version