
ஓம் நமசிவய, ஜெய்ஹிந்த் என்று சொல்லி பேருரையை முடித்திருக்கிறார், ராயன் படத்துக்காக தேசியவிருது பெற்றிருக்கும் தனுஷ்.
சில வாரங்களுக்கு முன்பே நடிகர் தனுஷின் ரசிகர்மன்றக் கொடியை சமூக வலைதளங்களில் காணமுடிந்தது. நேற்று முன்தினம் அதே கொடிகளுடன் பௌன்சர்கள் பாதுகாப்பு அரணுக்குப் பின்னால் இன்றைய ரசிகர்கள் (!) ஆரவாரம் செய்ததைக் காணமுடிந்தது. அவர்களுக்குப் பின்னே, முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களின் புலம்பலையும் கேட்க நேர்ந்தது.
மகன் லிங்காவுடன் சதுரங்கம் ஆடி பலமுறை தான் வென்றதையும், வெற்றிக் களிப்பில் எழ முற்பட்டபோது,”நான் இன்னும் ஜெயிக்கவில்லை, உட்காருங்கள்” என்று தடுத்து நிறுத்தி மகன் லிங்கா, உட்கார வைத்ததையும் சொல்லி குதூகலித்தார் தனுஷ். கூடவே, “வெற்றி ஒருவருக்கே உரியது அல்ல, அது நிரந்தரமும் அல்ல” என்று பஞ்ச் வைத்தார். மொத்தப் பேச்சும் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகத்தான். மேடையின் மீதிருந்த பேப்பர் குறிப்பை பார்வை கீழிறங்குவது சபைக்கு தெரியாதவாறு குனிந்து பார்த்து பேசியதைப் பார்க்கமுடிந்தது.
“நீயா உன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வரைக்கும்” என்ற அல்டிமேட் ஸ்டார் அஜீத் டயலாக்கை அப்போது தனுஷ் சொல்ல, “ஏதோ குறியீடு போல” என்று அந்த வார்த்தை வெளிப்பட்டதும் விசிலடித்த ரசிகர்களின் மகிழ்ச்சியில் எதிர்காலக்கனவுகள் கொப்பளித்ததை நேரலையில் அல்ல- நேரடியாகவே பார்த்தேன்.
சடார் சடாரென தனுஷ் காலில் விழுந்து ஆசிபெற 2031-க்கு ரெடியாகும் வயதுள்ள நைன்த் டென்த் காலகட்ட டிரவுசர்கள், நூற்றுக்கணக்கில் நின்று காத்திருந்து ஆசி பெற்று மகிழ்ந்தன. மேடையேறிய அனைவருக்கும் ஏதேதோ பரிசுப் பொருள்களை வழங்கி அவர்கள் அனைவரையும் அரவணைத்து உச்சி மோந்தார் தனுஷ்.
நேம் பேட்ச்கள் பேனர்களாகவும் பேனர்களே சுருங்கி நேம் பேட்ச்களாகவும் பகுதி முழுவதும் டாலரடித்தது. HBD நாள் கொண்டாட்ட விழாவாகவும், “நான் தமிழன்” என்று உரத்துச்சொல்லி, எப்போதும் உங்களோடுதான் இருப்பேன் என்று அறிவிக்கவுமே நடந்த ஏற்பாடு போல விழா மேடை இருந்தது.
தனுசும், நண்பா- நண்பீஸ் போல அவருக்கான மேஜிக் வார்த்தைகளை சொல்லி ரசிகர்களை அழைத்தார். அது என்ன வார்த்தை, எவ்வளவு தூரம் அது ரீச் ஆகப்போகிறது என்பதை அடுத்தடுத்த நாள்களில் இதே சமூகவலைதள ஏரியாவில் பார்த்துக் கொள்ளலாம்.
திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் மாண்புமிகு தவெக ஏரியாவை விட்டு விலகி தனுஷ் ஏரியா குறித்து இனிமேல் கவனத்தை திசை திருப்பிக்கொள்ளவும் இந்த என்ட்ரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். எந்த நடிகர் வந்தாலும் இதுபோல ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து கொண்டாட்டங்களில் பங்கேற்க எப்போதுமே ஒரு பகுதி இளையோர் கூட்டம் காத்துக்கிடப்பது ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்கு சொல்ல நினைப்பதாகவும் மனதில் படுகிறது.
எங்கெல்லாம் சறுக்கியுள்ளோம், எங்கெல்லாம் நிறைந்த காரணத்தால், நாம் மிச்சம் மீதம் இருக்கிறோம் என்பதை சம்மந்தப்பட்டோர் பகுப்பாய்வு செய்திட இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு வாய்ப்பு…
சொல்ல மறந்துட்டேனே… நடிகர் விஷால் என்ன தக்காளித் தொக்கா, அவரையும் சொல்லி ஆகணுமே. அவரும் இவர்களுக்கு முன்பே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்து அது நிராகரிக்கப் பட்டதால் சோர்ந்து போய், அதன் பின்னே சற்று உடல்நலம் குன்றியதால் ஒதுங்கி நின்றுவிட்டார்… இல்லையெனில் இந்நேரத்துக்கு தவெக மாண்புமிகு விஜய்க்கு மாற்றாக மாண்புமிகு (?) விஷாலுக்கு பலர் பயர் விட்டு ப்ளையிங் கிஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்…
(28.07.2026)
ந.பா.சேதுராமன்