Madras Kural

தனுஷ் திசைக்கு திரும்பிய பந்து!

கடந்த சில ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்த நடிகர்களில் முக்கிய நபர்கள், கேப்டன் விஜயகாந்த், விஷால் மற்றும் சரத்குமார். (கமல் – வேண்டாமே) கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவர் தேர்தலில் வென்றார். எந்தக் கட்சியிலும் சேரவில்லை. தேமுதிகவை தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். இன்னொரு பக்கம், ஒரே நேரத்தில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் , தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்று இரண்டு தேர்தலிலும் தேர்வாகி அனைவரையும் வியக்க வைத்தவர் விஷால். முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இறப்பால் காலியான ஆர்.கே.நகர் சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தலில் (2017) சுயேச்சையாக போட்டியிட்டு வேட்புமனுவில் குளறுபடி
என்ற காரணங்காட்டி போட்டியைவிட்டு விலக்கப்பட்டார்.

அதேபோல் நடிகர் சங்கத்தலைவர் பொறுப்பில் மூன்றுமுறை இருந்தவர் சரத்குமார். திமுகவில் 1996-ல் சேர்ந்தார். மாநிலங்களவை உறுப்பினராக (2001) தெரிவு செய்யப்பட்டார். பின்னர் (2007)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கினார். அ.இ.ச.ம.க. – அதிமுக கூட்டணியில் (2011) தென்காசி எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். 2024-ஆம் ஆண்டில் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டார்.
சரத்குமார் ஒரு கட்சியின் முதலாளியாக இருந்தவர். அந்தக் கட்சி இப்போது அவரிடம் இல்லை. விஷாலைப் பொறுத்தவரை 2017-ல் சுயேச்சை. 2026-ல்தான் தேர்தல் அரசியலுக்குள் விஷால் நுழையக் கூடும் என்பதுபோல சூழல் இருந்தது. 2026 முடியப் போகிறது. இதுவரை அப்படிப்பட்ட அறிகுறி ஏதும் தெரியவில்லை.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், அரசியல் முகவரி ஏதும் இல்லாமல் நேரடி களத்தில் குதித்தவர் விஜய். தமிழக வெற்றிக்கழகத்தை பிப்ரவரி 02- 2024-ல் தொடங்கியவர், 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி விட்டார். சினிமாவுலகம் மொத்தமும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு (சி.எம். ஆனதும் விஜய்க்கு முன்னால் ஜோசப் என்று இணைத்தே கெசட்டில் வெளியானது) வாழ்த்து தெரிவித்தது.

ஜோசப்விஜய் முதலமைச்சர் ஆன சில மாதங்களில்தான் அவரைப்போலவே ஸ்லிம்ரன் தேக கட்டு கொண்ட நடிகர்கள் தனுஷ், சிவ கார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்றோர் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்ட விஷயங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்தது. தனுஷ், எஸ்கே மற்றும் பிரதீப் போன்றோர் சமூகத்தின் மீதான அக்கறையை எப்போதிருந்து செலுத்தத் தொடங்கினார்கள், இப்போதுதான் அது வெளியில் தெரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மும்மூர்த்திகளின் வருகை குறித்த விஷயமே தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்பை உண்டாக்கி வைத்துள்ளது.

சூப்பர்ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்களைப் பொறுத்தவரை அவர்களின் குரலாக வெளிப்பட நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக டெமோ திண்ணைகள் உருவாக்கி வைக்கப் பட்டுள்ளன. புதுப்பட ரிலீஸ் தேதி, அரசியலில் ஏதோவொரு சுழற்சி நிலைகளில் அந்தத் திண்ணைகள் எழுந்து நின்று பேசுவது அனைவரையும் வியக்க வைக்கும். “சத்தமே இல்லாம எத்தன குடும்பங்க அண்ணனால -தலைவரால வாழுது தெரியுமா”? என்பதுதான் அதில் முதல் ஸ்டேட்டஸ். தலைவர் நமக்காக கல்யாண மண்டபம் கட்டியிருக்காரு, ஸ்கூல் கட்டியிருக்காரு இன்னும் கண்ணுக்குத் தெரியாம என்னென்னமோ செஞ்சுக்கிட்டிருக்காரு தெரியுமா- என்று ஒரு பக்கம் ஒரு கும்பல் கடுகுஉளுந்து போடாமலேயே பொரித்துத்தள்ளும். இன்னொரு பக்கம், தலைக்கு மை பூசாம இமேஜ் பத்திக் கவலையே படாத ஒருத்தனை உள்ளூர்ல காட்றா பாக்கலாம் காட்றா பாக்கலாம் என்று கண்ணாடி முன்னால் நின்று நெடியதொரு சண்டை போட்டுக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சிறப்பான சூழல், ஆகச்சிறந்த மனிதர்களைப் பெற்றிருக்கும் நமக்கான புதிய வரவுகள்தான் அரசியலில் திடீர் என்ட்ரீ மும்மூர்த்திகள். மாற்றம் தேவை என்று சொல்லி நாம் புறப்பட்டு வந்த அதே ஏரியாவிலிருந்து அதேபோன்று ‘மாற்றம்’ என்ற குரலோடு மற்றும்பலர் வந்துள்ளது தான் இன்றைய திடீர் பரபரப்புக்கு காரணம். சரக்கு வெச்சிருக்கேன் எறக்கி வெச்சிருக்கேன், ஆள்தோட்ட பூபதி என்று டஜன் கணக்கில் ஃபயர் குத்துப் பாட்டுகளை கொடுத்தவர் தளபதி என்றாலும், ஃபயரிலேயே ஆடி பாடிய “மன்மதராசா மன்மதராசா” என்ற ஒற்றைப் பாடலுக்கு இணை ஈலோகத்தில் உண்டா என்று நம்மைப் பார்த்து கேரள சினிமா ஜாம்பவான்கள் தலையில் அடித்துக்கொள்வதை கடந்து போய்விட முடியவில்லை. எத்தனை ஸ்டார் நடிகராக இருந்தாலும் விஐபி தரிசனம் தராத மாநிலமாயிற்றே. சரி. நாம, கட் அவுட் பாலாபிசேக ஊருக்குள் வருவோம்.

அதாவது எஸ்கே மற்றும் பிரதீப் ரங்கநாதன்களை விட அதிகளவு சலசலப்பை உண்டு பண்ணி இருப்பது தனுஷ் வருகைதான் என்றே சொல்லி விடலாம். கடந்தமாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு தனுஷ் வருகை தந்தபோது திரண்ட கூட்டம், பலரை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக மகளிரின் திரளான எழுச்சி.
சில நாள்கள் முன்னர் பெண் ரசிகர்களை சந்தித்த தனுஷ், இருபது கிராம் எடை கொண்ட வெள்ளியிலான காமாட்சி அம்மன் விளக்கை அவர்களுக்கு கொடுத்து கணக்கை மிரட்டலாகவே தொடங்கியுள்ளார். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளை உற்று கவனித்து கழகங்கள் எதிர்வினையாற்று முன்பே, “கா.அ.குத்துவிளக்கு கீழே ‘தாமரை’ இருக்கிறது, தாமரை இருக்கிறது.” என்று கண்டறிந்து கொதிப்பின் உச்சத்துக்குப் போனது தவெக தீவிர ஆதரவு தம்பிகள்தான்.

விஜய்யை பார்த்துவிட்டாலே போதும் என்று அவரே பயப்படும் அளவுக்கு அவர்மீது பாய்ந்து விழுந்து அன்பை வெளிப்படுத்திய இளவட்டங்கள் மொத்தமும் அங்கேதான் இருக்கிறார்களோ? என்று வியந்து நின்ற என்னைப் போன்றோர், தனுஷ் மீது உருண்டு பாய்ந்த இளசுகளைப் பார்த்ததும் அதிர்ந்து போயிருக்கிறோம். விஜய் மீது க்ரஷ் என்று பாய்ந்ததுபோக இவ்வளவு இளசுகள் இன்னும் மிச்சம் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடி வாய்ச் சந்தையில் எளிதாய் கிடைக்கக்கூடிய அறிவுரைகளை இளசுகள் தலையில் வைத்து அழுத்த ஒரு போதும் எண்ணம் இல்லை. அப்படிப்பட்ட அழுத்தங்கள் எப்போதுமே தீயாய் திரும்பி விடக் கூடியன – அறிவேன்.

இதுநாள்வரை “மற்றும்பலர்” என்று அதிமுக என்ற ஐம்பத்திஐந்து ஆண்டுகால கட்சியை காய்ச்சியெடுத்தும், தீயசக்தி திமுக என்று வறுத்தெடுத்தும் Solo Performance செய்து கொண்டிருந்த தவெகவின் மொத்த ‘விங்’ கும் இப்போது சுமோட்டோவாக ‘தனுஷ்’ திசை நோக்கி திரும்பியிருக்கிறது. SK வை ரெடி செய்து அனுப்பி வைத்திருப்பது திமுக என்று சொல்லிவிடுவது எளிது. தனுஷை அப்படி சொல்லமுடியுமா? அறிவாலய பில்டிங்கில் இருந்து ஒரே நேரத்தில் இப்படி இரண்டு பேருக்கு இஸ்திரி போட்டு அனுப்ப வாய்ப்பு இல்லையே… இதுபோக தனுஷை ஜெராக்ஸ் போட்டு எடுத்ததுபோல இருக்கும் பிரதீப் ரங்கநாதன் குறித்தும் ஒரு பிரின்டவுட் கொடுக்க வேண்டியநிலை.

இப்போதைக்கு SK மற்றும் பிரதீப்பை ஓரங்கட்டி வைத்து- முதன்முதலில் மகளிர் ஸ்பெஷலை குறிவைத்து வெள்ளியில் கா.அ.விளக்கு கொடுத்திருக்கும் தனுஷ் அட்டாக்கை கையில் எடுத்துள்ளனர். தனுஷ் என்ற பெயரும் மூன்றெழுத்து மந்திரம் என்று யாராவது ஓதி ஊதி விட்டிருக்கக்கூடும். அந்த வகையில் எதிர்வரக்கூடிய நாள்களில் எப்போதும் போல வலுவான திமுக அட்டாக்- கொஞ்சம் போல அதிமுக அட்டாக் என்ற ரெகுலர் ட்ராக்கில் மீட்டர் கேஜில் ரெயிலை ஓட்டாமல் தனுஷ் என்ற ஒற்றை இமேஜை முறியடிக்கும் ஃப்ராட்கேஜில் தவெக வண்டியை ஓட்ட முடிவெடுத்து விட்டார்களா தெரியவில்லை.

தனுஷ் என்ட்ரி குறித்த கேள்விகளுக்கு கூட்டணி கட்சிக்கூட்டத்தில் பேசும்போது பதில் கொடுத்திருக்கிறது தவெக.

“ஒரு கணக்கைப் போட்டு வைத்து டெல்லியில் போய் உட்கார்ந்து இருப்பவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். டெல்லி ரூபத்தில் எத்தனை சாத்தான்கள் வந்தாலும் எதிர்கொள்வோம். எல்லோரும் மனக்கோட்டை கட்டுகிறார்கள்” -என்றே பேசியிருக்கிறார் மந்திரி ஆதவ் அர்ஜூனா.
தவெக தேர்தல்பிரிவு மேலாண்மைப் செயலாளரும் இவர்தான் எனும்போது இது முக்கிய ஸ்டேட்மெண்ட்டாக கருதவேண்டி இருக்கிறது.

ந.பா.சேதுராமன்
(26.10.2026)

Exit mobile version