
தமிழ்நாடு அரசு திரைப்படக்
கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கடும் பாடுபட்டு எந்தவித ஊதியமுமின்றி “அலப்பறை” எனும் “பறை இசையைப் பற்றிய” ஒருமணி நேர படத்தினை, காரைக்குடியில் பறை வகுப்பு போன்ற நற்பணிகளைச் செய்துவரும் “மக்கள் மன்றம் ச.மீ. இராசகுமார்” என்பவரின் உதவியால் கலைக்கான கதையை 2023 – ஆகஸ்ட் அன்று இயக்கி முடித்துள்ளனர். அப்போது முதலே தொடங்கி விட்டது சிக்கல் என்கிறார்கள், படைப்பாக்க கலைஞர்கள்.
இதோ அவர்களே சொல்கிறார்கள். இக்கதைக்கான முழுச்செலவினையும் காரைக்குடி ராசகுமார் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக் கொண்டார். தற்போது இப்படம் முடிந்த நிலையில் இந்த அலப்பறை எனும் படத்தினை நாங்கள் படித்த எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் திரையிட கல்லூரி முதல்வர் திரு. மேகவர்ணம் அவர்கள், இந்த படத்தை குழுவோடு கலந்து யோசித்து எங்களுக்கு 24.7.25 வியாழக்கிழமை அன்று 10.00 மணிக்கு திரையிடலாம் என்று கூறியதால் நாங்கள் அதற்கான அனுமதியை பெற்று
அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வந்தோம்.
பெரும் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியுடனும் இருந்த நிலையில் 16/7/25 காலை கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. இப்படத்தை இங்கு முன்னோட்டமிட அனுமதி கிடையாது என்று சொன்னதால், நேரில் சென்று கல்லூரி முதல்வர் மேகவர்ணம் அவர்களைச் சந்தித்த போது, பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறினார். அதற்கு ஏற்றபடி நாங்களும் நடத்துகிறோம் என்று சொன்ன பின்னரும், திரையிட மறுத்தார்.
இந்தப் படத்தில் பறை இசையை ஒட்டு மொத்த தமிழர்களின் இசையாக, ஆதிவாசிகளின் இசையாக, வாழ்விற்கான மருத்துவ இசையாக மட்டுமே இயக்கியுள்ளோம்.
ஆனால் அவர்கள் இந்த படத்தினை சாதிப்படம் என்று சொல்லி,
“நாங்கள் மறந்துவிட்டு இருப்பதை நினைவு படுத்துகிறாயா?” என்று சொல்லி, கடும் வார்த்தைகளால் பேசி,
நம் ஆதித்தமிழரின் கலையான பறை இசைக்கான படத்தினை எதிர்ப்பது வேதனையாக இருக்கிறது.
தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியானது ஒரு மாணவனை ஊக்கப் படுத்தவும், சமுதாயதோடு நல்வழி நடத்தவும், நேர்மையுடனும் வாழ கல்வி அறிவு மிகவும் உதவுகிறது. ஆனால் பறை இசை என்றதும், இன்றும் சாதியத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் நபர்கள் எனது கல்லூரியில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனை அடைந்துள்ளோம்.
இந்த படத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். நம் கல்லூரி திரையரங்கில் நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு இது சாதியப்படுத்தி எடுத்திருப்பின் நீங்கள் ஒவ்வொருவரும் எங்களை கேள்வி கேட்கலாம்.
இது தனியொருவரின் படைப்பு அல்ல. நம் கல்லூரியின் பல மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதகாலம் உழைத்து உருவாக்கிய “அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான நம் அனைவரின் படைப்பு.
நாங்கள் இந்த படத்தினை விற்கவோ, இலாபம் பார்க்கவோ சிறிதும் நினைக்கவில்லை. இந்த விழிப்புணர்ச்சி படம் இணையம் மூலம் இலவசமாக மக்களைச் சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே எங்களின் அவா!
எனவே, நம் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த படத்தினை நம் கல்லூரியில் நாம் அனுமதி பெற்ற அதே தேதியில்
திரையிட உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு, அலப்பறை மாணவர் குழு சார்பாக, உங்கள் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன் ஆ.ஸ்வீட்ராஜ் – தொடர்பு எண்:
+91 8072862474- இப்படிப் போகிறது, கோரிக்கையும், மனுவும், சுமந்து நிற்கிற சாராம்சம்.
தொகுப்பு : பொன்.கோ.முத்து