மனிதக் கழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்க
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே
கடைபிடிக்கப்படுவது இல்லை. இது போன்ற சூழல்களில் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது சாதாரணமாக நிகழ்கிறது.
2023 மே 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில்
துப்புரவு நிரந்தரப் பணியாளரான கோவிந்தன், தற்காலிக துப்புரவுப்
பணியாளரான சுப்புராயலு இருவரும் தனியார் மேல்நிலைப் பள்ளியின்
கழிவுநீர் தொட்டி எனப்படும் செப்டிக் டேங்க்கை தூய்மைப்படுத்தி தூர்வார உள்ளே இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் உடல்களை மீட்க மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன இருவரையும் தூர் வார அழைத்திருந்த தனியார் பள்ளி தாளாளரை கைது செய்தனர்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான சம்பந்தப்பட்ட
தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர். அந்த விவகாரம் அதே இடத்தில் அப்படியே நிற்கிறது.
இன்று, அதே மாவட்டத்தின் புழல் பகுதியில் இருவர் இறந்துள்ளனர்.
செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், இஸ்மாயில். நண்பர்கள். கூலி வேலைக்கு யார் அழைத்தாலும் ஒன்றாகப் போய்வரும் தொழிலாளிகள். புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் அழைப்பின் பேரில் நிர்மலா என்பவரின் வீட்டு கழிவு நீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணிக்காக சென்றுள்ளனர். நிர்மலா வீட்டின் மாடிப்படியின் கீழ் குறுகலான இடத்தில் அமைந்திருந்த கழிவு நீர்த் தொட்டியை தூய்மைப் படுத்த இருவரும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது கழிவுநீர்த் தொட்டியில் இருந்து வெளிப்பட்ட விஷவாயு, இருவரையும் சுவாசமண்டலத்தில் போட்டுத் தாக்கியது. இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.
தொட்டிக்குள் இறங்கியவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் அருகில் இருந்தவர்கள் மேலே நின்றபடி
தொட்டியை எட்டிப்பார்த்து குரல் கொடுத்தனர். உள்ளே இருந்து குரல் மட்டுமல்ல, எந்த அசைவும் வெளியில் தெரியவில்லை. நிலைமை விபரீதமாகவே தீ அவிப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விபத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் சுவாச முக கவசம் அணிந்து கொண்டு, தொட்டிக்குள் இறங்கினர்.
அங்கே பாஸ்கர் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரின் சடலத்தையும் கண்டனர். சடலங்களை கருவிகள் உதவியுடன் வெளியே தூக்கினர்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றி
உடற்கூராய்வு பணிக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை –
மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு புழல் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷவாயு தாக்கி உயிர் இழந்த கூலி தொழிலாளி இஸ்மாயிலுக்கு லத்தீபா என்ற மனைவியும், ஒன்பது
வயதில் பெண் குழந்தையும் நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். உயிரிழந்த மற்றொரு கூலி தொழிலாளியான பாஸ்கருக்கு வசந்தி என்ற மனைவியும், மகன் ஒருவனும் உள்ளனர். கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிப்படும் விஷவாயுத் தாக்குதலுக்கு உயிரிழக்க மாதத்தில் ஐவராவது இருக்கிறார்கள்.கள்ளச் சாராய சாவுகளை விட இது கொடூரம் இல்லையா ?
மே 9-2023 அன்று, தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர்
வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகை தந்து இரண்டு தொழிலாளிகள் இறப்பின் பின்னணி குறித்து நேரில் விசாரணை நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத் தலைவர் வெங்கடேசன், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி
உயிரிழப்பது அதிகம். கல்வியில் முன்னேறிய மாநிலத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. விஷவாயுத் தாக்கி இருவர் உயிரிழந்த தகவலைக்கூட அரசு சார்பில் யாரும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. வாட்சப்பில் வந்த செய்திக் கட்டுரையை (நமது Madraskural.com இணையத்தில்
2023 மே1-ஆம் தேதி இரவே விரிவாகப் பதிவு செய்திருந்தோம். அதுதான் சமூக வலைதளங்களில் பரவியது. அதன் எதிரொலியே தேசிய ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வுப்பணி எனலாம்) பார்த்த பின்னரே ஆணையம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு
முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளில் கழிவு நீரை அகற்ற தகுந்த உபகரணங்கள் இருந்தும், குறைந்த கட்டணத்தில் கழிவு நீரை அகற்ற தனியார் நாடுவதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதேபோல் தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கழிவு நீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும்.கழிவு நீரை அகற்ற 10 44 22 என்ற எண்ணில் எவரும்
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அரசு தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் எந்தக் கூட்டமும் நடத்தவில்லை, முறையாக செயல்படவும் இல்லை. உள்ளாட்சி
அமைப்புகளில் கழிவுநீர் அகற்றுவதற்காக அதிநவீன உபகரணங்கள் தேவைப்படுவோர் ஆணையத்தை அணுகலாம். அதன் மூலம் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்திலிருந்து கிடைக்கும்
நிதியில் உபகரணங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதுவரையில் மாநில அரசு அதிகாரிகள் யாரும் ஆணையத்தை தொடர்பு கொள்ள வில்லை, மத்திய அரசின் நிதி பங்களிப்பில் அதிநவீன உபகரணங்கள் பெறுவதற்கு கூட தமிழ்நாடு அரசு முன்வரவில்லை- என மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர்
வெங்கடேசன், குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டுப் போய் இன்று ஆறாவது நாள். இதோ இன்னும் இரண்டுபேர்
உயிரிழந்துள்ளனர் !
பொன். கோ. முத்து