வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒட்டு மொத்த நாட்டிற்கான கருத்து. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை அது தலைகீழ் மாற்றம்தான். வடசென்னைதான் தேய்மானத்தின் உச்சத்தில் இருக்கிறது ! சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் அனைத்திலும் நார்த் மெட்ராசுக்கு எப்போதுமே பலமான அடிதான். கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், கொடுங்கையூர் என்று எந்த ஏரியாவுக்குள் நுழைந்தாலும் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சிறு தொழிற்சாலைகள் 24 மணிநேரமும் இயங்குவதைப் பார்க்கலாம். கண்களை செயலிழக்க வைக்கும் ஆர்க்வெல்டிங் பட்டறைகள், ஆஸ்துமா (ம) டி.பி. உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் பாலீஷ் பட்டறைகள், வார்னீஷ் – ஸ்ப்ரே பெயிண்டிங் பட்டறைகள் கணிசமாக இயங்குவதை வடசென்னையில்தான் பார்க்கலாம். தமிழ்நாட்டிலேயே அதிகளவு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இருக்கிற இடமும் வடசென்னைதான். வீட்டுக்கு ஒருவர் செயற்கையாய் விதைக்கப்பட்ட ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். என்றாவது ஒருநாள் பொதுமக்களாக பொங்கியெழுந்து பிரச்சினையை புகாராக அதிகாரிகளுக்கு அனுப்பினாலும் பெரிதாய் எந்த மாற்றமும் ஏற்படுவது கிடையாது. அதிகாரிகள் வந்து பார்த்து ஆய்வு செய்து சில நேரங்களில் சீல் வைத்து விட்டுப் போவதும் நடக்கும் ! ஓரிரு நாட்களில் சீல் அகன்றுவிடும். ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தவரும், பாலீஷ் பட்டறையில் புகைவிட்டவரும், எலக்ட்ரிக் (ஆர்க்) வெல்டிங் புகையால் கண்களை காலி செய்கிறவரும் அவரவர் தொழில் சேவை (?!) யை முன்பை விட இன்னும் சிறப்பாக செய்வார்கள்… வண்ணாரப்பேட்டை கே.ஜி.கார்டன், ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெரு, கொடுங்கையூரின் பல பகுதிகள் என மக்களை சாட்சியமாக்கி சாகடிக்கும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. ரெசிடென்டல் ஏரியா, இன்டஸ்ட்ரீ ஏரியா என்பதெல்லாம் நார்த் மெட்ராசுக்கு விலக்கு இல்லை. அண்ணா நகரிலோ, அடையாறிலோ, தி. நகரிலோ, மயிலாப்பூரிலோ இதுபோன்று நடக்குமா – நடக்கத்தான் விடுவார்களா? அதிகாரிகளின் அலட்சியப் பார்வையும் ஆள்வோரின் திட்டமிட்ட புறக்கணிப்பும் காலந்தோறும் தொடர்கதையாகவே இருந்து வருவது கொடுமையின் உச்சம். பெருக்கெடுத்து சாலையில் ஓடும் உடைப்பெடுத்த கால்வாய்கள், விபத்து இல்லாமல் வீட்டுக்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கும் அக்மார்க் அயோக்கிய சாலைகள் மாறப்போவது எந்நாளோ… நார்த்மெட்ராசில் லுங்கி (கைலி) யோடு வெளியில் வந்தால் அவன் அக்யூஸ்ட்டு, அதுவே அண்ணாநகரிலும், மைலாப்பூரிலும் லுங்கியோடு வெளியே வந்தால் ” என்ன சார் ரிலாக்ஸ்டா வாக் பண்றீங்களா?” என்று குழையும் போக்கை இயல்பாய் கவனிக்கலாம். “ஊராங்க இது, டிரான்ஸ்ஃபர் கிடைச்சா சொந்த ஊருக்கே போய் செட்டிலாயிடுவேன்” என்று முப்பது வருடத்துக்கும் மேலாக சொல்லிக் கொண்டேடேடேடே இருந்தவர், கூடுதல் போலீஸ் எஸ்.பி., யாக ரிட்டயர்டு ஆகி நார்த் மெட்ராசில்தான் இப்பவும் வாழ்கிறார். சப்- இன்ஸ்பெக்டராக இருக்கும் போது மெட்ராசைத் திட்ட ஆரம்பித்தவர், ரிட்டயர்டு ஆகி ஐந்தாண்டுகள் கடந்தும் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்… (எல்லா முறைகேடுகளுக்கும் மக்களின் உயிரோடு விளையாடும் அனைத்து விஷயங்களுக்கும் அரசியல் அதிகாரமே பாதுகாப்பை கொடுக்கிறது. அந்த அதிகாரத்தை மீறி குரல் கொடுக்கிற மண்ணின் மைந்தர்கள் எல்லாக் காலத்திலும் நொறுக்கப்பட்டே வருகிறார்கள்) வாழவைத்த ஊரை வாயார மனதார திட்டிக்கொண்டே மெட்ராசில்தான் வாழ்கிறார்கள்… “சார், நீங்க குடியிருப்புப் பகுதிகளை தொழிற்சாலை பகுதிகளாக மாற்றிக் கொண்டுவரும் ஆட்களையும் சேர்த்துத் திட்டலாம், அதற்கு எதிராகவும் குரல் கொடுக்கலாமே”… என்றால் ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பாருங்கள்; லட்சம் கோடி டாலர் மதிப்பிலான சிரிப்பு அது!
-ந.பா.சேதுராமன் –