பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஆயுதப்படை போலீசை அரிவாளால் வெட்டியுள்ளார் கொடூர ஆசாமி ஒருவர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை காவலர் தவமணியும் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தார்.
மதிய உணவிற்காக போலீஸ்காரர் தவமணி ஹோட்டலுக்கு சென்றபோது செய்யூர் குளக்கரை அருகேயுள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு சிலர் மாலைபோட்டு மரியாதை செய்து கொண்டிருந்தனர். அண்ணலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் அப்போது வழங்கப்பட்டது . கூட்ட நெரிசல் காரணமாக அங்கு நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு வராமல் அன்னதானம் வழங்கும்படி அவ்வழியே சென்ற போலீஸ்காரர் தவமணி அறிவுறுத்தியுள்ளார். செய்யூர் தேவராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்ற ஆசாமி, போலீஸ்காரர் தவமணியின் அறிவுரையை ஏற்காமல் அவரை ஏளனமாகப் பேசியதாக கூறப்படுகிறது. அசோக்கும், தவமணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த பகுதி மக்கள், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அன்றைய தினம் செய்யூர் பகுதியில் ஓட்டல்கள் ஏதும் திறக்கப்படாததால் சாப்பிடுவதற்காக தவமணி, அங்கிருந்து சித்தாமூர் சென்றுள்ளார். சித்தாமூருக்கு போலீஸ்காரர் தவமணி செல்வதை அறிந்து கொண்ட அசோக், அவர் நண்பர் வசந்த்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தவமணியை பின் தொடர்ந்து வந்துள்ளார். சித்தாமூர் அருகிலுள்ள கீழ்க்கரணை கிராமத்தை தவமணி கடந்தபோது பெட்ரோல் இல்லாமல், தவமணியின் மோட்டார் சைக்கிள் நின்று விட்டது. தவமணியை பின் தொடர்ந்தே வந்த அசோக்கும் கூட்டாளி வசந்தும் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் தவமணியின் தலையை வெட்ட முயற்சி செய்துள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட தவமணி இடது கையால் அரிவாளைத் தடுத்துள்ளார், அப்போது தவமணியின் கட்டைவிரல் இரண்டாக பிரிந்து வலது கையில் பலத்த வெட்டு விழுந்தது.
மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டு விட்டு போலீஸ்காரர் தவமணி, அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து தஞ்சம் புகுந்தார். சம்பவத்தை கவனித்த பொதுமக்கள் சத்தம் புடவே அசோக்கும், வசந்தும் தப்பித்து ஓடிவிட்டனர்.
நடந்த சம்பவத்தை விவரித்து சித்தாமூர் போலீஸ் ஸ்டேசனில் தவமணி புகார் அளித்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இரவோடு இரவாக செய்யூரில் பதுங்கியிருந்த அசோக்கை கைது செய்தனர். முன்னதாக போலீசாரைப் பார்த்ததும் அசோக், தப்பித்து ஓட முயன்றதில் அவருடைய கால் உடைந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காலில் மாவுக்கட்டுடன் மதுராந்தகம் சிறையில் அசோக் அடைக்கப் பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்கின் நண்பர் வசந்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
– பிரீத்தி எஸ்.