Madras Kural

மக்காச்சோளத்துக்கும்
முட்டைக்கும் என்ன தொடர்பு ?


இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்கிற அளவுக்கு கோழிமுட்டை, விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ‘பண்ணை கொள்முதல் விலையாக 5.35 ரூபாய்க்கு ஒரு முட்டை விற்கப்படவுள்ளது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் 5.20 ரூபாய் என இருந்த ஒரு முட்டையின் விலை, 15 காசுகள் ஒரேநாளில் உயர்ந்துள்ளது.

அக்டோபர் 2020-ல் இதுபோல், பண்ணை முட்டை விலை 5.25 ரூபாய் என்று உயர்ந்து, முட்டைப் பிரியர்களை மிரளவைத்தன கோழிகள். இப்போது அந்த சாதனையை முறியடித்து 5.35 ரூபாயாக ஒரு முட்டையின் விலை உயர்ந்துள்ளது.
பண்ணை முட்டை உற்பத்தியாளர்கள் தரப்பில், அதிகளவு வெப்பம் காரணத்தால் வயதான கோழிகள் இறப்பை சந்திக்கும் என்பதால், அவற்றை வெப்ப காலம் தொடங்கும் முன்னரே விற்று விட்டதாகவும், அதனாலும் இப்படி முட்டைப் பஞ்சம் ஏற்பட்டு விலையேற்றத்துக்கு வழியாகி விட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.


ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பார்கள் அல்லவா அது போல, ஏழைகளுக்கேற்ற எளிய – மலிய அசைவ உணவு முட்டைதான். அதனால்தான் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரசாங்கம், முட்டைகளை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும், வாரத்துக்கு மூன்றுமுறை முட்டை என்றளவில் சற்றேற 75 லட்சம் மாணவர்களுக்கு முட்டை கொடுப்பதென்றால், எவ்வளவு முட்டையை உற்பத்தி செய்யவேண்டும் என்பதும் இப்போது மனதில் கேள்வியாக எழுகிறது.


விருதுநகர் வணிகர் ஒருவர் இது பற்றி நம்மிடம் பேசும்போது, ”கோழிகளின் முக்கியத் தீவனமாக விளங்குவது மக்காச்சோளம். மக்காச்சோளம் எப்போதெல்லாம் விலை உயர்வை சந்திக்கிறதோ அப்போதெல்லாம், முட்டையும் விலை உயர்வைச் சந்தித்தே ஆகவேண்டும், இதுதான் இயற்கைச் சட்டம்.
ஒரு மாத கடனுக்கு ஒரு குவிண்டால் மக்காச் சோளத்தை 2,150 – ரூபாய்க்கு வாங்கிப் போனவர்கள், அதே ஒரு குவிண்டால் மக்காச் சோளத்துக்கு இப்போது, 2,550 – ரூபாயை கையில் வைத்துக்கொண்டு காத்துக்கிடக்கிறார்கள்; சோளம்தான் கிடைக்கவில்லை… கடனுக்கு சோளத்தை வாங்கிப்போனவர்கள், கையில் பணத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தாலும், சோளம் ஸ்டாக் இல்லை ! ” என்கிறார்.
அதாவது கோழிக்கான முக்கியத் தீவனம், போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை, கோழிக்கு உணவில்லை, முட்டையும் போடவில்லை என்பதே அந்த வணிகர் சொல்ல வருவது.
லாஜிக் சரியாய்த்தானே இருக்கிறது ?
உணவே கொடுக்காமல் முட்டையை
எதிர்பார்ப்பது சரியாய் இருக்குமா என்ன ?
மக்காச்சோளம் பெருக என்ன வழி – முதலில்
அதைத்தான் நாம் பார்க்கவேண்டும் !

எஸ்.ரங்கநாயலு உதவியுடன் – சேது

Exit mobile version