போக்குவரத்து துறையில் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சேவையாற்றும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, அனைத்தையும் கணினி மயமாக்கியது.
அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையை மேம்படுத்தி, ”வாஹன் 4” என்ற கணினி வழியில் அமல்படுத்தி, அவ்வழியேதான் செயல்பட வேண்டும் என அந்தந்த மாநில அரசுகளுக்கு கால அவகாசம் கொடுத்து, மத்திய அரசு உத்தரவிடப்பட்டது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, (அப்போது அதிமுக அரசு – அதை இப்போதும் அப்படியே தொடர்வது திமுக அரசு) அதை பொருட்படுத்தவில்லை என்றுதான் சொல்லத் தோணுகிறது. மிகவும் காலம் தாழ்த்திக் கொண்டே, விஷயத்தை நடைமுறைப்படுத்தாமல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இருந்தது.
ஒருநாள் திடீரென ஏதோ உதித்தது போல், அதாவது 2018-ஆம் ஆண்டில், ”வாஹன் 4” கணினி முறையை அவசரகதியில் நடைமுறைக்கு கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. ஏகப்பட்ட குறைபாடுகளை உள்ளடக்கி வைத்துள்ள இந்த, “வாஹன் 4” – ஐ யாரும் கண்டுகொள்ளவில்லை! இருப்பினும் அவரவர் வேலையை வழக்கம்போல் அதிகாரிகள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அரசுத்துறை சார்ந்த கோப்புகள் கணினி மயமாகும் போது கவனிக்காமல் விட்டால் பல சிக்கல்கள் வந்து விடுவது இயல்பு. அந்தவகையில், போக்குவரத்துத் துறையின் பழைய பதிவுகளை (உள்ளடக்கம்) கணினியில் சேமிக்கும் (மேப்பிங்) போது பல தவறுகள் நேர்ந்துள்ளது தெளிவு !
எங்கு குறைபாடு உள்ளதோ அதை சரி செய்யாமல், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் தவறுகள் நடப்பதாக கூறுவது அறியாமை. இது இப்படியிருக்க, இப்போது வந்திருக்கும் மாநில போக்குவரத்துத்துறை ஆணையர் நடராஜன், ஒரு சுற்றறிக்கையை ( சர்க்குலர்) வெளியிட்டுள்ளார். ”இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமாக இருந்தாலும் பெயர் மாற்றம் செய்ய குறிப்பிட்ட அந்தந்த அலுவலகத்திற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் வந்து வாகனத்தை ஆய்வு செய்த பின் தான் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என்கிறது அந்த சுற்றறிக்கை !
ஆர்டிஓ ஏரியாவில் நன்கு வேலை தெரிந்த சீனியர்கள், இது குறித்து தங்கள் ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். “முற்றிலும் கணினி மயம் என்று ஆக்கப்பட்டவுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஆர்டிஓ முதல், பணியாளர் வரை அனைவருக்கும் போதிய கணினி பயிற்சி கொடுத்திருக்க வேண்டும் – அப்படி எந்த அதிசயமும் நடக்கவில்லை.
கணினி விவகாரத்தில் புதிதாக வரும் ஓஏ முதல் ஆர்டிஒ வரையில் பெரும்பாலானவர் திணறுகிற நிலைதான் உள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் இருக்கும் செக்சன் ரைட்டர்கள், “நாங்கள், தொழிலில் சீனியர்கள், கணினியில் அம்புட்டும் எங்களுக்கு அத்துப்படி” என்று சொல்லிக் கொண்டு (அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது) எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். செக்சன் ரைட்டர்கள் கொடுக்கும் கோப்புகளில், கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுகின்றனர், பொறுப்பில் உள்ளவர்கள்.
வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் தவறு நடக்கிறது. என்ற காரணத்தால், மாநில போக்குவரத்து ஆணையர், ’இனிமேல் வரும் எந்த வாகனமாக இருந்தாலும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அறிக்கை பெற்ற பின்தான் செய்ய வேண்டும்’ என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனமாக கணினியில் மாறியது எப்படி என்ற கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது. அதுமட்டுமல்ல, சில வாகனங்களுக்கு கடன் வாங்கியதாக மேற்குறிப்பு உள்ளது . இருசக்கர வாகனத்திற்கான எரிபொருள் பெட்ரோலுக்கு பதிலாக டீசல் என வருகிறது, இதுபோன்ற பல தவறுகள் கணினியில் அதிகமாகவே இருக்கிறது.
வாகன உரிமையாளர் எனது வாகனம் காராக இருக்கும் போது எப்படி லாரியாக மாறியது, அதை மாற்றிக் கொடுங்கள் என்று ஒரு விண்ணப்பம் அளித்தால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாடிஃபிகேஷன் செய்து அதை மாநில போக்குவரத்து ஆணையருக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள், அதை கண்காணித்து நெறிப்படுத்த துறை அதிகாரி ( DTC1) சரி பார்த்து ’ஓ.கே.’ சொன்னால்தான் அந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வருகிறது, அதுவும் காலதாமதமாகத்தான். மாநில போக்குவரத்து ஆணையர் அலுவலகம்தான் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
அதேபோல் முக்கிய அறிவிப்பாக மார்ச் மாதம், ஒரு சுற்றறிக்கை மாநில போக்குவரத்து துறையின் சார்பில் வெளியானது. ’வாகனம் வாங்குபவர் யாராக இருந்தாலும், பெயர் மாற்றம் என்று வரும் போது, வாகனம் மற்றும் முகவரிக்கு உரிய அத்தாட்சி இரண்டையும் கொண்டு வந்து மோட்டார் வாகன ஆய்வாளர் சரி பார்த்தபின்தான் வாகனத்தை பெயர் மாற்றம் முடியும்’ என்ற சுற்றறிக்கையை மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அவர்கள் கூற்றுப்படி, வாங்குபவர்கள்
திருட்டு வாகனத்தை வாங்குகிறார்களா…
அல்லது அவர்களே திருடர்களா?
இதுவே மக்கள் முன் நிற்கும் கேள்வி !
விகடகவி எஸ். கந்தசாமி