சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார். விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும்: 1. சென்னை, தண்டையார் பேட்டை. வினோபா நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். வேலை முடித்து வீட்டிற்கு செல்ல, மெரினா கண்ணகி சிலை அருகே இரவு 11 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஒருவர் சரவணகுமாரிடம், அவசரமாக வீட்டிற்குப் பேச வேண்டும் என செல்போனை கேட்க, சரவணகுமார் செல்போனை கொடுத்துள்ளார். உடனே, அந்த நபர் செல்போனில் பேசுவது போல நடித்து, அருகில் இருவர் தயாராக நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி ஓட முயன்றார்.
சரவணகுமார் அப்போது சத்தம் போடவே, சற்று தொலைவில் ரோந்துப் பணியில் இருந்த அண்ணா சதுக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் ரோந்து வாகன ஓட்டுநரான ஆயுதப்படை காவலர் தினேஷ் ஆகியோர் பைக்கில் தப்பிக்க முயன்ற நபர்களை விரட்டினர். போலீஸ் விரட்டியதைப் பார்த்ததும் பைக்கை கீழே போட்டு விட்டு கடல்மணலில், செல்போன் வழிப்பறி நபர்கள் ஓடத் தொடங்கினர். ஓடிய மூவரில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மற்ற இருவரும் பிடிபட்டனர். பழைய வண்ணாரப்பேட்டை மோகன்ராஜ், ராயபுரம் சரத்குமார் ஆகிய இருவர் தவிர மூன்றாவது குற்றவாளி சிறுவன் என்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும்: 2. நான்கு வயது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்த பெண்ணுக்கு இணையதளம் மூலம் அறை பதிவு செய்திருந்தும், தங்குவதற்கு அறை கொடுக்க மறுத்த ஓட்டல் நிர்வாகத்திடம் பேசி, மற்றொரு ஓட்டலில் தங்குவதற்கு அழைத்துச் சென்று தகுந்த நேரத்தில் உதவியுள்ளார், நுங்கம்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) அப்துல்மஜீத்.
எஸ்.எஸ்.ஐ. அப்துல் மஜித், லேக் எரியாவில் ரோந்து சென்றபோது, ஒரு ஓட்டலின் வெளியே உடைமைகள், இரண்டு குழந்தைகளுடன் அழுதபடி ஒரு பெண் நின்றுள்ளார். அப்துல் மஜீத், ஜீப்பை நிறுத்தி அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் கோமதி ஜெயந்த். கணவர் ஜெயந்த் ராஜகோபால் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகனின் மருத்துவ சிகிச்சைக்காக 23ஆம் தேதி அன்று சென்னைக்கு வர உள்ளதால், கோமதி ஜெய்ந்துக்கு 23 ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ஓட்டலில் தங்குவதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தியுள்ளார். 22 ஆம் தேதி, மீண்டும் ஓட்டல் நிர்வாகத்திடம் மீண்டும் உறுதி செய்தபின் 23-ஆம்தேதி காலை, மேற்படி ஓட்டலில் தங்க வந்தபோது, ஓட்டல் நிர்வாகம் அறை கொடுக்க மறுத்து வெளியே அனுப்பியதால், (இது போன்ற ஓட்டல்களின் பெயர்களையும், அதன் நிர்வாகிகளையும் விசாரணை நடத்திய போலீசார், வெளிப்படைத் தன்மையோடு அம்பலப்படுத்த வேண்டும் என்பது நமது பார்வை) குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து அழுது கொண்டிருந்ததும் தெரியவந்தது.
எஸ்.எஸ்.ஐ. அப்துல் மஜீத், ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபோது, ஓட்டல் நிர்வாகமும் சரியான விளக்கம் தரவில்லை. இந்நிலையில் கோமதியின் கணவர் இணையதளம் மூலம் அதே நுங்கம்பாக்கத்திலுள்ள வேறொரு ஓட்டலில் அறை பதிவு செய்து மனைவியிடம் தெரிவிக்க, அப்துல் மஜீத் அந்த பெண்மணியையும் குழந்தைகளையும் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்று கோமதியின் கணவர் பதிவு செய்த ஓட்டலில் சேர்த்து, பாதுகாப்பாக தங்குமாறு அறிவுரை கூறிச் சென்றார்.
சம்பவம் குறித்து கோமதி ஜெயந்த் கொடுத்த புகார்மனு மீது, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் கருணையும் கடமையும் கைகோக்க சிறப்பாய் செயல்பட்டுள்ளார் எஸ்.எஸ்.ஐ. அப்துல் மஜீத்.
விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும் : 3 தமிழ்நாடு முதலமைச்சர் செல்லும் வழியில் கத்தி வைத்திருந்த நபரை பிடித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய காவலர் அழகுமுத்து. அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் செல்லும் வழிப்பாதை பாதுகாப்பு பணியில் அழகுமுத்து ஈடுபட்டிருந்தார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒரு நபர் கத்தியை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்து விட்ட காவலர் அழகுமுத்து ஓடிச் சென்று அந்த நபரை மடக்கிப்பிடிக்க… அந்த நபர் கத்தியை காட்டி அழகுமுத்துவை மிரட்டத் தொடங்கினார். மிரட்டலுக்கு அஞ்சவில்லை, அழகுமுத்து. ஆளையும் கத்தியையும் மொத்தமாக மடக்கி, போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்து ஜீப்பை வரவழைத்து விட்டார்.
இன்ஸ்பெக்டர் தலைமையில் ஜீப்பில் வந்த போலீஸ் டீம், ‘கத்தி’ ஆசாமியை தூக்கிக் கொண்டு போய் விசாரிக்க, அதே ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் தான் மிரட்டிய நபர் என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும் : 4 சென்னை தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் பாரதி. சம்பவத்தன்று, வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் இரவு பணியில் இருந்தார். இரவு 10.30 மணியளவில், வாகனத் தணிக்கையின் போது பைக்கில் வேகமாக வந்த இருவரை மடக்கி விசாரித்தார். விசாரித்துக் கொண்டிருக்கும் போதே இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஓடாமல் நின்றவன் இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தலைமைக் காவலர் பாரதி, தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து வந்து கத்தி ஆசாமியை ஜீப்பில் ஏற்றினர். விசாரணையில், கத்தியை மறைத்து வைத்திருந்த நபர், திருவொற்றியூர் விஷ்வா என்பதும், பல குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர் என்பதும், எண்ணூரில் உள்ள ஒரு நபரை கொலை செய்யும் திட்டத்துடன் போய்க் கொண்டிருக்கும் போது, போலீசில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து விஷ்வா கைது செய்யப்பட்டார்.
நடக்கவிருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும் : 5 தாயையும், பேரக்குழந்தையையும் அறையில் வைத்து பூட்டி கொடுமைப்படுத்திய மகனை விசாரிக்க சென்றபோது காவலரை தாக்கிய மகன் கைது. தாய் மற்றும் பேரன் மீட்பு. சென்னை, கோடம்பாக்கம், கோவிந்தராஜன் தெருவில் வசிக்கும் அமலா என்ற வயதான பெண்மணி காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு தனது மகன் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப் படுத்துவதாக கொடுத்த புகாரை விசாரிக்க கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள், காவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அமலாவின் மகன் சதிஷ் குமார், தாய் அமலாவை தாக்கியதோடு, அமலாவையும், சதிஷ்குமாருடைய தங்கையின் கைக் குழந்தையையும்,வீட்டின் அறையில் தள்ளி பூட்டி வைத்ததும் தெரியவந்தது.
சதீஷ்குமாரை போலீசார் விசாரிக்க சென்றபோது, அவர் பூட்டியிருந்த அறையை திறக்கமாட்டேன் எனக்கூறி வாக்குவாதம் செய்து, தலைமைக் காவலர் பெருமாளை கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் கைகளால் அவரை அடித்ததோடு சீருடையை கிழித்து, தகாத வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் காவலர்கள் இருவரும் சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றி, அறைக்குள் பூட்டி வைத்திருந்த வயதான பெண்மணி அமலாவையும் மற்றும் கைக்குழந்தையையும் மீட்டனர்.
சம்பவம் குறித்து அமலா கொடுத்த புகார் மற்றும் தலைமைக் காவலர் பெருமாள் கொடுத்த புகார் என 2 புகார்களின் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சதீஷ்குமார் கைது செய்யப் பட்டார்.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இதற்காகத்தான் போலீசாரை, நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
-விகடகவி எஸ். கந்தசாமி.