மனிதகழிவை மனிதனே அகற்றுகிற கொடுமைக்கு விடிவு கிடைக்க
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. கழிவில் ஏற்படும் அடைப்புகளை நீக்க கையாளும் தூர்வாருதல் முறையில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே
கடைபிடிக்கப்படுவது இல்லை. உடலிலோ கைகளிலோ முகத்திலோ
எந்தக் கவசமும் இல்லாத நிலையில் தான் தனியார் இடங்களிலும் பொது இடங்களிலும் கழிவுகளை தூர்வாரும் பணியை தொழிலாளிகள்
மேற்கொள்கிறார்கள். இதுபோன்ற சூழல்களில் ஆண்டுக்கு ஆயிரம்
பேருக்கு குறையாமல் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது சாதாரணமாக நிகழ்கிறது.
கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகள் யாரும் இல்லாமலே
தனியொருவனாக கால்வாய்க்குழியில் இறங்கும் மனிதர்கள், தங்கள் உயிரை பலிகொடுத்த பின்னர், அங்கே வருகிற அதிகாரிகள் பலர் !
இதுபோன்ற மரணங்களின் நீட்சியாக அண்மைய கொடூரம், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நடந்துள்ளது. துப்புரவு நிரந்தரப் பணியாளரான 45 வயதான கோவிந்தன், தற்காலிக துப்புரவுப்
பணியாளரான 45 வயது சுப்பு ராயலு ஆகிய இருவரும் அதே பகுதியிலுள்ள
தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டி எனப்படும் செப்டிக் டேங்க்கை தூய்மைப்படுத்தி தூர்வார அதற்குள் இறங்கியுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியில் வராததால் அருகில் இருந்தவர்கள் மேலிருந்தபடியே கழிவு நீர் தொட்டியை எட்டிப் பார்த்தபோது
தொழிலாளர்கள் இருவரும் மயங்கிய நிலையில் தொட்டிக்குள் இருந்துள்ளனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் செல்லவே,
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் முகத்தில் சுவாச கவசம் அணிந்தபடி
தொட்டிக்குள் இறங்கி பார்த்தபோது தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இருவர் உடல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டது.
இருவரின் உடல்களையும் மீஞ்சூர் போலீசார் உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இறந்து போன இருவரையும் தூர் வார அழைத்திருந்த தனியார் பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை போலீசார் கைது செய்தனர்
உலக உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதி அன்றுதான் இந்த சம்பவம் நடந்தது. உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு தரக்கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் அதற்கு மறுத்து விட்டது. அடுத்த கட்டமாக பொன்னேரி வட்டாட்சியர்
செல்வகுமார் முன்னிலையில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர்.
கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய குழிக்குள் இறங்கிய வகையில் 2019- ஆம் ஆண்டில் மட்டுமே (அதிகபட்சமாக) 110 பேர் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர். கழிவுநீர்த் தொட்டியில் இருக்கும் அம்மோனியா கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனோ ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு
போன்ற வாயுக்களின் தாக்குதலால் உயிரிழப்பு நடக்கிறது.
கழிவுநீர்த் தொட்டிகளில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியது ஹைட்ரஜன் சல்பைடு வாயுதான். மீத்தேன், அம்மோனியா, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களுக்கும் குறை இருக்காது. குழியில் இறங்கும் தொழிலாளி ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை சுவாசிக்கும்போதுதான் தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தை எதிர்கொள்கிற நிலை ஏற்படுகிறது.
’மனித மலத்தை மனிதனே அள்ளக் கூடாது என்றும் அதற்குரிய
கருவிகள் துணையுடன், போதுமான பாதுகாப்பு கவசங்களுடன் மேற்பார்வையாளர் முன்னிலையில் செய்யலாம்’ என்கிறது, சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள்.
நேற்று நான்குபேர் என்றால், இன்று இரண்டு பேர், நாளை எத்தனையோ
என்றளவில்தான் மலக்குழி மரணங்கள் அணிவகுக்கின்றன.
இந்நிலையில், மே 9-2023 அன்று, தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வேதனை கொப்பளித்த அந்தப் பேச்சின் சுருக்கம் இதுதான் : இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பது அதிகம். கல்வியில் முன்னேறிய மாநிலத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. சொல்லப்போனால் இந்தத் தகவலைக்கூட அரசு சார்பில் யாரும் எங்களுக்குத் தெரிவிக்க வில்லை. வாட்சப்பில் பரவிய செய்திக் கட்டுரையை (நமது Madraskural.com இணையத்தில் 2023 மே1-ஆம் தேதி இரவே விரிவாகப் பதிவு செய்திருந்தோம். அதுதான் சமூக வலைதளங்களில் பரவியது. அதன் எதிரொலியே தேசிய ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வுப்பணி எனலாம்) பார்த்த பின்னரே ஆணையம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் கழிவு நீரை அகற்ற தகுந்த உபகரணங்கள் இருந்தும், குறைந்த கட்டணத்தில் கழிவு நீரை அகற்ற தனியார் நாடுவதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதேபோல் தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கழிவு நீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என உறுதி ஏற்கவு வேண்டும்.கழிவு நீரை அகற்ற 10 44 22 என்ற எண்ணில் எவரும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அரசு தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் எந்தக் கூட்டமும் நடத்தவில்லை, முறையாக செயல்படவும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் அகற்றுவதற்காக அதிநவீன உபகரணங்கள் தேவைப்படுவோர் ஆணையத்தை அணுகலாம். அதன் மூலம் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்திலிருந்து கிடைக்கும் நிதியில் உபகரணங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதுவரையில் மாநில அரசு அதிகாரிகள் யாரும் ஆணையத்தை தொடர்பு கொள்ளவில்லை, மத்திய அரசின் நிதி பங்களிப்பில் அதிநவீன உபகரணங்கள் பெறுவதற்கு கூட தமிழ்நாடு அரசு முன்வரவில்லை- என மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார்பு ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொன். கோ. முத்து