Madras Kural

“என் பள்ளிக்கூடம் எங்கே சார்?” கலெக்டருக்கு மாணவன் கடிதம்!

பொன்னேரியில் தகர்க்கப்பட்ட ஆதி திராவிடர் நல பள்ளி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டப் படவில்லை. மாணவர் சேர்க்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு “என் பள்ளியை திருப்பிக் கொடுங்கள் சார்” என்று மாணவன் எழுதியிருக்கும் கடிதம் கவனம் ஈர்த்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் பிரிவுகள் இருந்த இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வந்தனர். பழமையான இந்தப் பள்ளி கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு சிதிலமடைந்த பள்ளி கட்டிடம் ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்க்கப் பட்டது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் அங்கு பயின்று வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதால் இந்தாண்டு அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நடைபெறவில்லை என தெரிகிறது. இந்த சூழ்நிலையில்தான் பள்ளி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் பலமுறை மாவட்ட கல்வி அலுவலர் முதல் ஆட்சியர் வரை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். அதே பகுதியில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நான்காம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகனான அருள் மொழிச்செல்வன் என்ற மாணவனின் குடும்பம் இங்கிருந்து சின்னகாவனம் பகுதிக்கு குடி பெயர்ந்ததால் அப்பகுதியில் உள்ள பள்ளியில் சேர்ந்து தற்போது கல்வியை தொடர்ந்து வருகிறான். ஏற்கனவே தகர்க்கப்பட்ட தான் கல்வி பயின்ற பள்ளி கட்டிடம் மீண்டும் புதிதாக கட்டப் படாததைக் கண்டு மனவேதனை அடைந்த மாணவன் அருள் மொழிச் செல்வன் இதுகுறித்து மாநில ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு தனது பெற்றோர் உதவியுடன் பதிவு தபால் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளான். அதில், “ஏழை மாணவர்கள் படித்து வந்த ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி அதனை இடித்து தள்ளியதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அங்கு புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏற்புடையது அல்ல. இதன் காரணமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தடை பட்டுள்ளது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே உடனடியாக இடிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளான். மாணவனின் கடித வாயிலான இந்த வேண்டுகோள்தான் பேசுபொருள் ஆகியுள்ளது.

பொன்.கோ.முத்து

Exit mobile version