திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ‘மைக்கல்’ நிலத்தில் மேய்ச்சலுக்காக அனுப்பி உள்ளார். மாலை மேய்ச்சல் முடிந்து, ஆட்டு மந்தைகள் ஆடுதொட்டிக்கு திரும்பி வந்த நிலையில் அதில் மூன்று ஆடுகள் குறைந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து உதயகுமார் அளித்த புகாரின் பேரில் சோழவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சாலையில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சொகுசு கார் ஒன்றில் வந்து இறங்கிய ஆறு பேர்,மேய்ச்சலில் இருந்த மூன்று ஆடுகளை திருடி மகிழுந்தில் (கார்) ஏற்றிக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து மகிழுந்தின் பதிவெண் மூலம் ஆடுகளை திருடிச் சென்ற திருமழிசை செல்வி,அதே பகுதி அஜித்குமார், மதுரவாயல் சரத்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சொகுசு மகிழுந்தில் வந்து, ஆடுகளை திருடிச் சென்று கள்ளச் சந்தையில் இறைச்சிக்காக விற்பனை செய்து வந்ததை மூவரும் ஒப்புக் கொண்டனர். செல்வியின் கணவன் அஸ்ராஅலி, இதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதும் மேலும் பலர் ஆடுகளை கடத்தி விற்கும் கும்பலில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் நடுவண் சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய அஸ்ராஅலி உள்ளிட்ட நபர்களையும் ஆடுகடத்தப் பயன்பட்ட காரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
P.K.M